வட்டார ஒருங்கிணைப்பை ஆசியான் வலுப்படுத்த வேண்டும்: அமைச்சர் விவியன்

2 mins read
50500e7b-b74f-435f-9074-fb599d97126e
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடம்), லங்காவியில் மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசானைச் சந்தித்துப் பேசினார். - படம்: வெளியுறவு அமைச்சு
multi-img1 of 2

ஆசியான், வட்டார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, அதன் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

உலகெங்கும் அடிப்படை நிலையிலான மாற்றங்கள் நிகழும் வேளையில் இது அவசியம் என்றார் அவர்.

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் திரு டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு வர்த்தகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சாத்தியமும் அந்த மாற்றங்களில் அடங்கும். அந்த மாற்றங்களுக்கு ஏற்ப ஆசியான் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

மலேசியாவின் லங்காவியில் ஜனவரி 18, 19ஆம் தேதிகளில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான ஓய்வுத்தளச் சந்திப்பில் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அவ்வாறு கூறினார்.

சந்திப்பில் ஆசியானின் முன்னுரிமைகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

ஆசியானின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள மலேசியாவின் முன்னுரிமைகள், வட்டார, அனைத்துலகச் சவால்களை ஆசியான் கையாளும் விதம் போன்றவை குறித்தும் அவர்கள் கலந்து பேசினர். மியன்மார் விவகாரமும் அவர்களின் கலந்துரையாடலில் இடம்பெற்றது.

ஆசியானின் சமூகக் கட்டமைப்பு முயற்சிகளை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.

ஆசியானின் தலைமைத்துவத்தை மலேசியா ஏற்றுள்ள நிலையில், அதன் முன்னுரிமைகள் தொடர்பில் மலேசியாவுடனும் இதர ஆசியான் உறுப்பு நாடுகள், வெளிப்புறப் பங்காளித்துவ நாடுகள் ஆகியவற்றுடனும் அணுக்கமாகப் பணியாற்றுவதன் தொடர்பில் சிங்கப்பூரின் கடப்பாட்டை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் மின்னிலக்கப் பொருளியலில் வாய்ப்புகளை உருவாக்குவதும் இதில் அடங்கும்.

வெளிப்புறப் பங்காளித்துவ நாடுகள் அனைத்துடனும் ஆசியானின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த மலேசியா மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவளிக்கவும் அவர் உறுதியளித்தார்.

மியன்மார் நிலவரம் தொடர்பிலான ஆசியானின் ஐந்து அம்ச அமைதித் திட்டம், தலைவர்களின் முடிவுகளை அமல்படுத்துவதில் மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.

லங்காவி பயணத்தின்போது அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வியட்னாமியத் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான புய் தான் சன், மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்