ஆசியான் - ர‌ஷ்யா: ஒத்துழைப்பை வலுப்படுத்த மறுவுறுதி

ஆசியான் - ர‌ஷ்யா: ஒத்துழைப்பை வலுப்படுத்த மறுவுறுதி

2 mins read
963ae1e3-379c-4c0a-a28b-4acf0d60e664
ஆசியான்- ர‌ஷ்யா பங்காளித்துவத்தைச் சிறப்பிக்கும் உச்சநிலைச் சந்திப்பிற்கு இடையே பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சந்தித்துக்கொண்டனர். இரு நாட்டுப் பிரதிநிதிகள் குழுவினரும் அதில் கலந்துகொண்டனர். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

ஆசியானும் ர‌ஷ்யாவும் பொதுவான துறைகளில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதற்கான கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தியுள்ளன.

இருதரப்புக்கும் இடையிலான உறவைச் சிறப்பிக்கும் உச்சநிலைச் சந்திப்பு, ர‌ஷ்யாவின் தென்மேற்கில் உள்ள காஸான் நகரில் நடைபெற்றது.

இம்மாதம் 17, 18ஆம் தேதிகளில் நடைபெற்ற சந்திப்பு, ஆசியானுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையிலான உறவின் 35வது ஆண்டுநிறைவையும் ஆசியான்-ர‌ஷ்யா கலந்துரையாடல் பங்காளித்துவத்தின் 30வது ஆண்டுநிறைவையும் பறைசாற்றியது.

ஆசியானுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையிலான 35 ஆண்டுகால உறவை உச்சநிலைச் சந்திப்பு பறைசாற்றியது.
ஆசியானுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையிலான 35 ஆண்டுகால உறவை உச்சநிலைச் சந்திப்பு பறைசாற்றியது. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சந்திப்பின்போது சில ஆவணங்கள் அதிகாரபூர்வ ஒப்புதலைப் பெற்றதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (ஜூன் 18) அறிக்கை வெளியிட்டது.

அவற்றுள், காஸான் அறிவிப்பும் ஒன்று. ஆசியானுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடரும் உறவின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதுடன் எதிர்கால ஒத்துழைப்புக்கான பாதைக்கும் அது வழிவகுக்கிறது.

கடல்துறை, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொடர்பு, பாதுகாப்பு, கல்வி, கலாசாரம் ஆகிய பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள காஸான் அறிவிப்பு அழைப்பு விடுக்கிறது.

கலாசார ஒத்துழைப்புக்கான கூட்டு அறிக்கை ஒன்றும் உச்சநிலைச் சந்திப்பில் வெளியிடப்பட்டது. இருதரப்பு மக்களுக்கு இடையில் ஆழமான பிணைப்பை உருவாக்கவும் கலாசாரப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் அது அழைப்புவிடுக்கிறது.

ஆசியானுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நடைமுறை ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ஆசியான்-ர‌ஷ்யா விரிவான செயல்முறைத் திட்டமும் (2026 - 2030) உச்சநிலைச் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உச்சநிலைச் சந்திப்பை ஏற்றுநடத்தினார். ஆசியான் தலைவர்களுடன் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சந்திப்பில் கலந்துகொண்டார்.

சந்திப்பின்போது பேசிய அவர், ஆசியானுக்குத் திரு புட்டின் வழங்கும் ஆதரவை வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

ஆசியான் வட்டார மாநாடு, கிழக்கு ஆசிய உச்சநிலைச் சந்திப்பு என ஆசியான் வழிநடத்தும் முயற்சிகளில் ர‌ஷ்யா நீண்டகாலமாகக் கலந்துகொண்டிருப்பதையும் திரு வோங் சுட்டினார்.

‘இவ்வாண்டின் பிற்பாதியில், பிலிப்பீன்சில் நடைபெறவுள்ள ஆசியான் வட்டார மாநாட்டிலும் கிழக்கு ஆசிய உச்சநிலைச் சந்திப்பிலும் ர‌ஷ்யா பங்கேற்கும் என்று சிங்கப்பூர் எதிர்பார்க்கிறது,” என்றார் அவர்.

பேரிடர் நிர்வாகம், போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றிலும் ஆசியானும் ர‌ஷ்யாவும் இணைந்து செயலாற்ற முடியும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

ஆசியானும் ர‌ஷ்யாவும் பல அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
ஆசியானும் ர‌ஷ்யாவும் பல அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

கல்வி, கலாசாரப் பரிமாற்றங்கள் மூலம் இருதரப்பு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை ஆசியானும் ர‌ஷ்யாவும் வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவும் ஈரானும் செய்துகொண்ட அமைதி உடன்பாட்டைச் சிங்கப்பூர் வரவேற்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர் வோங், பூசலுக்கு அது நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வகைசெய்யும் என்று நம்புவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்ர‌ஷ்யாஉச்சநிலை மாநாடு