உலகமயமாக்கல் மூலம் ஆசியா பல ஆண்டுகளாக பயனடைந்தது, ஆனால் தற்போது உலகில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதனால் பாரம்பரிய உலகமயமாக்கல் முறைகளில் சில மாற்றங்களைச் செய்து உலகமயமாக்கலில் ஆசியா முன்னிலை வகிக்கலாம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (மே 24) தோக்கியோவில் நடைபெற்ற 29ஆவது நிக்கெய் மாநாட்டில் கலந்துகொண்டபோது அந்த கருத்தை துணைப் பிரதமர் கான் தெரிவித்தார்.
கடந்த வாரம் (மே 15) துணைப் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார் திரு கான்.
“வட்டார நாடுகளும் சீனாவும் ஒத்துழைப்பு, இணைந்து இயங்குவது ஆகியவற்றில் சொந்த வழிகளை வகுக்க வேண்டும். சீனா- அமெரிக்கா உறவில் தைவான் தொடர்பாக பதற்றம் நிலவுகிறது. அது இவ்வட்டாரத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
“தைவான் நீரிணையில் ஏதேனும் மோதல் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட நாடுகளை மட்டும் பாதிக்காமல் உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும்,” என்று துணைப் பிரதமர் கான் கூறினார்.
சீனாவுடன் அனைவரும் அணுக்கமாக செயல்பட விரும்புகிறோம். பெரும்பாலான ஆசிய நாடுகள் சீனாவை பெரும் வர்த்தக பங்காளியாகக் கொண்டுள்ளன. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க உலக நாடுகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பு முக்கியம் என்பதையும் திரு கான் சுட்டிக்காட்டினார்.
சீனாவை ஓதுக்கி அல்லது தனித்து செயல்பட்டால் அது நன்றாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யா -உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல், வடகொரியாவின் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் போன்றவையும் உலகப் பொருளியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக துணைப் பிரதமர் கான் கூறினார்.
நிச்சயமற்ற சூழலில் ஒவ்வொரு நாடும் முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் கண்டு வெளிப்படையாக பேசி அவர்களின் பங்காளித்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆசிய நாடுகள் மின்னிலக்கம் மற்றும் பசுமை பொருளியலிலும் அதிக கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். அதில் பல வாய்ப்புகள் உள்ளதாக துணைப் பிரதமர் கான் குறிப்பிட்டார்.

