தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கு 230,000 புதிய விமானிகள் தேவை

2 mins read
a0db45f2-431a-417e-990e-b3ccec9a98f9
ஆசிய பசிபிக் வட்டாரப் பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தலைமைச் செயலாளர் ஜுவான் கார்லோஸ் சலாஸருடன் சிங்கப்பூர் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் சூவெலிங். - படம்: சாவ் பாவ்

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் விமானப் போக்குவரத்துத் துறை கண்டு வரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக ஏராளமான பணியாளர்கள் அந்தத் துறைக்குத் தேவைப்படுகிறார்கள்.

அடுத்த 15 ஆண்டுகளில், அதாவது 2042ஆம் ஆண்டுக்குள் ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கு 230,000க்கும் மேற்பட்ட புதிய விமானிகளும் 250,000க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்துப் பராமரிப்புத் தொழில்நுட்பர்களும் தேவைப்படுவார்கள் என அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தலைமைச் செயலாளர் ஜுவான் கார்லோஸ் சலாஸர் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரில் புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்ற ஆசிய-பசிபிக் வட்டாரப் பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசினார்.

400க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்துத் துறை பங்காளிகளும் பயிற்றுவிப்பு நிபுணர்களும்  அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

தொழில்நுட்பம் சார்ந்த தரப்படுத்தப்பட்ட பயிற்சிக்கு உகந்த சூழல் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தேவைப்படுகின்றது என திரு சலாஸர் தெரிவித்தார்.

விமானிகளையும் தொழில்நுட்பர்களையும் பிற விமானப் போக்குவரத்து நிபுணர்களையும் விரைவாக உருவாக்க அந்தச் சூழல் கைகொடுக்கும்.

2042ஆம் ஆண்டை தோராயமாக தாம் குறிப்பிட்டதாகச் சொன்ன அவர்,  இன்றைய குழந்தைகள் பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைப்பதை அது குறிக்கும் என்றார்.

ஆசிய பசிபிக் வட்டாரத்திற்குத் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்க விரைவான பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இந்த வட்டாரத்தில் பயிற்சிக்கான வசதிகள் போதுமான அளவு இல்லை என்றும் திரு சலாஸர் தமது உரையில் குறிப்பிட்டார்.

விமானிகளை உருவாக்குவதற்கான பயிற்சிக் கூடங்கள், விமானப் போக்குவரத்துப் பராமரிப்புப் பயிற்சி மையங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கான கற்பித்தல் நிலையங்கள் போன்றவற்றுக்கு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் கடுமையான பற்றாக்குறை இருப்பதாக அவர் சொன்னார்.

“நாம் வட்டார பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக, தென்கிழக்கு ஆசியாவிலும் தெற்காசியாவிலும் அவற்றை ஏற்படுத்துவதன் மூலம் அத்தகைய வட்டாரங்களுக்கு வெளியே உள்ள பயிற்சிக்கூடங்களைச் சார்ந்திருக்கும் நிலைமை குறையும்,” என்றார் திரு சலாஸர்.

குறிப்புச் சொற்கள்