ஆசிய பசிபிக் வட்டாரத்தின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 2030ஆம் ஆண்டுக்குள் US$34.5 டிரில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்த வட்டாரத்தின் முன்னணி செல்வ மையம் என்னும் நிலையை சிங்கப்பூர் வலுப்படுத்தி வருகிறது.
இது தொடர்பான ஆய்வறிக்கையை பிடபிள்யூசி (PwC) அமைப்பு வெளியிட்டுள்ளது.
‘ஆசிய பசிபிக் சொத்து மற்றும் செல்வ நிர்வகிப்புப் புரட்சி - 2026’ என்னும் அந்த அறிக்கையில், ஆசிய பசிபிக் வட்டாரத்தின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (ஏயுஎம்) 6.8 விழுக்காடு என்னும் கூட்டு வருடாந்தர வளர்ச்சி காணும் என முன்னுரைக்கப்பட்டு உள்ளது.
அது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிகம். அமெரிக்காவின் ஏயுஎம் வளர்ச்சி 6.2 விழுக்காடாகவும் ஐரோப்பாவின் வளர்ச்சி 5.6 விழுக்காடாகவும் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்குடன் இணைந்து ஆசிய பசிபிக் வட்டாரத்தின் இரண்டு ஆகப்பெரிய அனைத்துலக முதலீட்டு மையங்களில் ஒன்றாகத் திகழும் சிங்கப்பூர், தற்போது உலகளாவிய அரசுரிமை செல்வ நிதியங்களில் 8 விழுக்காட்டு சொத்துகளைக் கொண்டிருக்கிறது. அத்துடன், அதன்வசம் US$4.6 டிரில்லியன் ஏயுஎம் உள்ளது.
இது, அதிக நிகர மதிப்புள்ள செல்வத்திற்கான ஓர் இடம் என்னும் அதன் நிலையை வலுப்படுத்துகிறது.
ஆசிய பசிபிக் வட்டாரத்திலிருந்து சிங்கப்பூருக்கு வரும் நிதி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அந்த வட்டாரத்தின் உயர் நிகர மதிப்புச் சொத்துகள் 2030ஆம் ஆண்டு 6.9 விழுக்காடு கூட்டு வருடாந்தர வளர்ச்சி விகிதத்துடன் US$52.4 டிரில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிய பசிபிக் சொத்து மற்றும் செல்வ நிர்வாக வருவாயில் தனியார் சந்தைகளின் பங்கு கடந்த 2012ஆம் ஆண்டின் 20.3 விழுக்காட்டிலிருந்து 2024ஆம் ஆண்டு 55.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது, இன்னும் அதிகரித்து 2030ஆம் ஆண்டுவாக்கில் 59.5 விழுக்காடு வளர்ச்சியடைந்து US$99.8 பில்லியனைத் தொடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

