தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய திடல்தடப் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு சிங்கப்பூர் பெண்கள் அணி தேர்வு

2 mins read
19063de8-5de2-48df-9288-75be0b134e49
(இடமிருந்து) சாந்தி பெரேரா, லாவினியா ஜெய்காந்த், எலிசபெத் ஆன் டான், கெர்ஸ்டின் ஓங் ஆகியோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் திறந்த நிலை திடல்தட வெற்றியாளர் போட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெற்ற பெண்கள் நால்வர் அணி 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் முடிவில் தேசிய விளையாட்டரங்கின் அகண்ட தொலைக்காட்சித் திரையைப் பார்த்த சாந்தி பெரேராவுக்கு தனது கண்களை நம்ப முடியவில்லை.

கண்ணைச் சுருக்கிப் பார்த்ததில் தான் கண்டது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார். அவரும் அவருடைய அணியைச் சேர்ந்த பெண்களும் தேசிய சாதனையை சமன் செய்திருப்பதை உணர்ந்தார். அதனால், அவர்கள் அணி ஆசிய திடல்தட வெற்றியாளர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற தாய்லாந்துக் குழுவைச் சேர்ந்த ஜிராபாட் கனோன்டா, சுபானிச் பூல்கர்ட், சுகந்தா பெட்ராக்‌ஷா, அதிச்சா பெட்குன் ஆகியோர் 44.51 நொடிகளில் ஓடி முடித்து வெற்றி வாகை சூடினர். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த கெர்ஸ்டின் ஓங், எலிசபெத் ஆன் டான், சாந்தி பெரேரா, லாவினியா ஜெய்காந்த் குழு 44.96 நொடிகளில் இரண்டாம் நிலையில் வந்தது. இவர்களுக்கு அடுத்து தைவானிய அணி 45.06 நொடிகளில் ஓடி முடித்து மூன்றாம் நிலையில் வந்தது.

இருநூறு மீட்டர் ஓட்டத்தை 23.11 நொடிகளில் ஓடி சாதனையை ஏற்படுத்திய சாந்தி பெரேரா தனது அணியின் வெற்றியில் வியப்பு தெரிவித்தார். ஏனெனில் தான் வெளியூரில் ஓட்டப் பயிற்சி பெற்று வந்த நிலையில், உள்ளூர் சக ஓட்டக்காரர்களுடன் தொடர் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடவில்லை என்று கூறினார்.

இருபத்து எட்டு வயதான சாந்தி பெரேரா 2017ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்டி என், டிப்னா லிம் பிரசாத், நுர் இஸ்லின் சைனி ஆகியோருடன் இணைந்து இதே 44.96 நொடிகளில் இந்தத் தொடர் ஓட்டத்தை ஓடி சாதனை படைத்ததை நினைவுகூர்ந்தார். “இந்த முறை ஓட்டம் முடிந்தவுடன் நான் கண்களை உயர்த்தி திரையைப் பார்த்தவுடன் நாங்கள் செய்ததை உணர்ந்து வியப்பில் ஆழ்ந்தேன்,” என்று கூறினார்.

“இவர்களுடன் நான் பயிற்சியில் ஈடுபட்டதில்லை. தொடர் ஓட்டத்தில் குச்சியை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றுவதை மேம்படுத்தலாம். ஆகையால், ஓட்ட நேரத்தை சமன் செய்வதோடு இல்லாமல், அதைக் குறைக்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது,” என்று சாந்தி பெரேரா விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்