ஆசியப் பணக்காரர்கள் தொழிலை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் சிக்கல்

ஆசியப் பணக்காரர்கள் தொழிலை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் சிக்கல்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 7:03 pm

2 mins read

ஆசியாவின் முதலாம் தலைமுறை தொழிலதிபர்களுக்கு வயதாகிவிட்டதால், தங்களது தொழில்களை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கத் தயாராகி வரும் வேளையில், பலரும் அந்த உருமாற்றத்திற்குத் தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

வாரிசுரிமைக்குத் திட்டமிடும்போது, தொழிலை அடுத்து யார் வழிநடத்துவது, உரிமைகளை எவ்வாறு பிரிப்பது, நிறுவனத்தை உருவாக்கிய தலைமுறை எப்போது, எந்த அடிப்படையில் ஒதுங்கிக்கொள்வது என்பன போன்ற கேள்விகள் போதுமான அளவு திறந்த மனத்துடன் விவாதிக்கப்படுவதில்லை.

‘ஜூலியஸ் பேயர் ஃபேமிலி பாரோமீட்டர்’ என்னும் நிறுவனத்தின் அண்மைய ஆய்வறிக்கை இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது.

ஒரு தொழிலை விற்பனை செய்யும் சூழல் ஏற்படும்போது இந்தக் கேள்விகள் வணிக ரீதியாக மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆசிய வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் சொத்து நிர்வாக நிபுணர்களில் 3.5 விழுக்காட்டினர் மட்டுமே, தாங்கள் ஆலோசனை வழங்கும் வணிகக் குடும்பங்கள் இத்தகைய விற்பனை அல்லது மாற்றத்திற்கு முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் அந்த விகிதம் 2.3 விழுக்காடு என்னும் ஆகக் குறைந்த அளவிலேயே உள்ளது.

வணிகத்திலிருந்து ஒரு குடும்பம் வெளியேறுவதைச் சீர்குலைக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளுக்கு, நிறுவனத்தின் மதிப்பீடு குறித்த மாறுபட்ட எதிர்பார்ப்புகளே மிக முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த முரண்பாடுகள், உணர்வுபூர்வமான பிணைப்பு, பாரம்பரியம் பற்றிய கவலைகள், காலநேரம் ஆகியன அடுத்தடுத்த காரணங்களாக உள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உலக அளவில் அதிக சொத்து மதிப்புடைய குடும்பங்களுக்குச் சேவை செய்யும் 700க்கும் மேற்பட்ட ஆலோசகர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களின் சொந்தக் கருத்துகளைக் காட்டிலும், அந்தக் குடும்பங்கள் பற்றிய ஆலோசகர்களின் மதிப்பீடுகளை அது பதிவு செய்துள்ளது.

உறவுமுறை மேலாளர்கள், வரி மற்றும் சட்ட நிபுணர்கள், குடும்ப-அலுவலக நிபுணர்கள், செல்வ வளத்தைத் திட்டமிடுவோர், முதலீட்டு ஆலோசகர்கள், ஆலோசனை நிபுணர்கள் ஆகியோர் சொத்து நிர்வாக நிபுணர்களில் அடங்குவர்.

ஒரு குடும்பத் தொழில் அல்லது சொத்து விற்பனை செய்யப்பட்ட பிறகு என்ன செய்வது என்பது தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதில், அடுத்த தலைமுறையினரின் தீவிரப் பங்கேற்பு மிகக் குறைவாக இருக்கும் வட்டாரமாக ஆசியா உள்ளது.

குறிப்புச் சொற்கள்