ஈரான் போர் விமான எரிபொருள் விநியோகத்தை முடக்குவதால் ஆசியப் பயணிகள் அதிகக் கட்டணம் மற்றும் விமானச் சேவை இடையூறுகளை எதிர்பார்க்கலாம்

ஈரான் போர் விமான எரிபொருள் விநியோகத்தை முடக்குவதால் ஆசியப் பயணிகள் அதிகக் கட்டணம் மற்றும் விமானச் சேவை இடையூறுகளை எதிர்பார்க்கலாம்

2 mins read
f2a4b955-97ce-442b-9b8e-8167232fcb00
பிப்ரவரி 28ஆம் தேதியன்று மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து விமான எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அந்தளவுக்கு இப்பகுதியில் உள்ள விமான நிறுவனங்கள் (குறிப்பாகக் குறைந்த கட்டண விமான நிறுவனங்கள்) அடிக்கடி விமானங்களை இயக்குவதற்கான செலவைச் சமாளிக்க முடியாது என்பதே ஆய்வாளர்களிடையே உள்ள ஒருமித்த கருத்தாகும். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: விண்ணை முட்டும் விமான எரிபொருள் விலையும் குறைந்து வரும் விநியோகமும் பல விமான நிறுவனங்களை விமானச் சேவைகளைக் குறைக்கவும் கட்டணங்களை உயர்த்தவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, ஆசியாவில் உள்ள விமானப் பயணிகள் சவால்மிக்க கோடைக்காலப் பயணப் பருவத்தை எதிர்கொள்ள உள்ளனர்.

பிப்ரவரி 28ஆம் தேதியன்று மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து விமான எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அந்தளவுக்கு இப்பகுதியில் உள்ள விமான நிறுவனங்கள் (குறிப்பாகக் குறைந்த கட்டண விமான நிறுவனங்கள்) அடிக்கடி விமானங்களை இயக்குவதற்கான செலவைச் சமாளிக்க முடியாது என்பதே ஆய்வாளர்களிடையே உள்ள ஒருமித்த கருத்தாகும்.

சில வாரங்களுக்குள் விமான எரிபொருள் தீர்ந்துபோகும் அபாயம் குறித்து ஐரோப்பாவில் அபாய மணி ஒலிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவைப் போன்று ஆசியாவும் நேரடியான விநியோக நெருக்கடியை எதிர்கொள்கிறதா என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்களே நிலவுகின்றன.

பேங்காக்கைச் சேர்ந்த காசிகார்ன் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வின்படி, உலகளாவிய எரிபொருள் கப்பல் போக்குவரத்தின் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியான போக்குவரத்து இந்த மத்திய கிழக்கு நெருக்கடியால் முடங்கியுள்ளது. இதன் விளைவாக, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் திட்டமிடப்பட்ட 5.3 மில்லியன் உலகளாவிய விமானங்களில் 150,000க்கும் அதிகமான விமானங்கள் ஏற்கெனவே ரத்தாகின.

சில ஆசிய விமான நிறுவனங்கள் தினமும் மில்லியன் கணக்கான டாலரை இழந்து வருவதைச் சுட்டிக்காட்டிய எண்டாவ் அனேலிட்டிக்ஸ் நிறுவனத்தின் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் ஷுகோர் யூசோப், போர் தொடரும் நிலையில், மேலும் பல விமானச் சேவைகள் குறைக்கப்படுவது உறுதி என்று கூறினார்.

விமானச் சேவைகளின் எண்ணிக்கை குறைவது விமானப் போக்குவரத்து இணைப்பைப் பலவீனமாக்கும் என்று ஆய்வாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

“செய்திகளில் அதிகக் கட்டணங்கள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டு வரும் வேளையில், சேவையின் நம்பகத்தன்மை மற்றும் பயணத் தரத்தின் வீழ்ச்சி குறித்தும் பயனீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று டெனியோ ஆலோசனை நிறுவனத்தின் பயனீட்டாளர் மற்றும் பொருளியல் பிரிவின் உலகளாவியத் தலைவர் திரு ஜீ லெஃபெவ்ரே கூறினார்.

குறிப்புச் சொற்கள்