30 பேருக்கு விருது வழங்கிச் சிறப்பித்த ஆசிய பெண்கள் நலச் சங்கம்

1 mins read
fc365f7a-6492-4b50-acb1-091d98e5df79
விடாமுயற்சிக்கான விருது வென்ற ஒன்பது வயது சோ இங், சிறந்த பராமரிப்பாளருக்கான விருது வென்ற அவரின் தந்தையார் சேமுவல் இங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய பெண்கள் நலச் சங்கம் (AWWA) ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் ‘சமூக ஒருங்கிணைப்புச் சேவை’ விருது வழங்கும் விழாவிற்கு சனிக்கிழமை (நவம்பர் 8) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 30 வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

சமூக சேவையாற்றும் தொண்டு நிறுவனமான அச்சங்கம் 1970ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அது ஒரு சுகாதார மையத்தை நடத்தி வருகிறது. சமூக ஒருங்கிணைப்பு சேவையை 1991ஆம் ஆண்டில் சங்கம் அறிமுகப்படுத்தியது. உடற்குறையுள்ள இளையோரை வழக்கமான பள்ளிகளிலும் சமூகத்துடனும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த முயற்சி தொடங்கப்பட்டது.

சிறப்புத் தேவையுடைய இளையர்களின் சாதனைகளைக் கொண்டாடவும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு நல்கவும் சமூக ஒருங்கிணைப்புச் சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாண்டு விருது பெற்றோரில் சோ இங் என்ற 9 வயது சிறுமியும் ஒருவர். அவருக்கு அரிதான தோல் பிரச்சினை பிறவியில் இருந்தே உள்ளது. இருப்பினும், அவர் வாழ்க்கையில் தளராமல் செயல்பட்டுவருவதால் விடாமுயற்சிக்கான விருதைப் பெற்றார். அவரின் ஒற்றைப் பெற்றோரான தந்தை சேமுவல் இங் சிறந்த பராமரிப்பாளருக்கான விருதை வென்றார்.

விருது வென்றோரில் இன்னொருவரான 19 வயது திரு துர்கேஸ்வரன் கிருஷ்ணன், பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர். உடற்குறையுள்ளோர் எதையும் சாதிக்கமுடியாதவர்கள், உதவியை நாடிக்கொண்டிருப்பவர்கள் என்ற எண்ணத்தை அவர் மாற்ற விரும்புகிறார்; அவர்கள் சமுதாயத்தோடு உள்ளடங்குவதற்கு குரல்கொடுக்கவும் விழைகிறார்.

குறிப்புச் சொற்கள்