புவிசார் அரசியல் உலகைப் பிரித்து வைத்திருக்கும் நிலையில் சிங்கப்பூர், ஒரு சாரார் அரசியலைத் தவிர்க்க வேண்டும்.
மாறாக, அது மதிப்புமிக்க முன்னுரைப்புகளைச் செய்வதன் மூலம் மற்றவர் நமது நாட்டைத் தேர்ந்தெடுப்பர் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு சான், தமது தொகுதியும் ராடின் மாஸ் தொகுதி அடித்தள அமைப்புகளும் இணைந்து ஸான்டே தொடக்கப் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு மதிய உணவு நிகழ்ச்சியில் சனிக்கிழமை (பிப்ரவரி 8ஆம் தேதி) உரையாற்றியபோது மேற்கண்டவாறு கூறினார்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்து பேசிய அமைச்சர், குடியரசு கடந்த 60 ஆண்டுகளில் நிறைய சாதித்துள்ளதாகத் தெரிவித்தார். எனினும், இந்தச் சவாலான காலகட்டத்தில் ஆபத்துகள் நிறைந்திருப்பதாக அவர் சொன்னார்.
“1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நமக்கு தேவையானவற்றுக்கு நமது உழைப்பையே நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்துள்ளது. அதனால், நாம் முன்வைக்கும் திட்டங்களை தொடர்ந்து மறுஉருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது,” என்று அவர் விளக்கமளித்தார்.
இதைச் செய்வதற்கு தொடர்ந்து மற்றவருக்கு நாம் தேவைப்படும் நிலையில் நம்மை வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் பரந்த அளவிலான நட்பு வட்டத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் திரு சான் எடுத்துக் கூறினார்.
“உலக நாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும், அதில் பலதரப்பட்ட மக்கள் இங்கு வந்து ஒன்றாய் கூடி வாழ வேண்டும்,” என்றார் திரு சான்.
இதை அடைய நமக்கு மற்ற நாடுகளின் நலன்கள், அச்சங்கள், கவலைகள், விருப்பங்கள் ஆகியவை பற்றிய ஆழமான புரிதல் வேண்டும் என்று கூறினார்.

