குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் பலரும் உறவினரை மனத்தில் சுமந்து பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்.
கட்டுமான ஒப்பந்தங்களுக்கான நிர்வாகியாகப் பணியாற்றும் 34 வயது நிஷத் ஃபர்ஹின் இஸ்லாம், கணவர் ஸுஹெத் அமான் ஸலிலுடன் சிங்கப்பூரில் கடந்த ஏழு ஆண்டுகளாக வசிக்கிறார்.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் பிறந்து வளர்ந்த நிஷத், அங்கு முஸ்லிம்கள் சிறுபான்மைச் சமூகமாக உள்ளதைக் குறிப்பிட்டார்.
“இந்தியாவில் எங்கள் சமூகத்திற்குரிய உணவு முறை உள்ளிட்ட சில வழக்கங்களை இங்குப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை ரமலான் வழங்குகிறது,” என்றார் ஸுஹெத் அமான் ஸலில்.
“எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மீன் போன்ற கடல் உணவுகளைப் பெரிதும் உண்பர். எங்கள் குழம்பு வகைகளில் காரம் அதிகம் இருக்காது. தாளிப்புப் பொருள்கள் குறைவு, புளிப்பு அதிகம்,” என்றார் நிஷத்.
சிங்கப்பூரில் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலம் மட்டுமே இவர்களுக்குத் தெரியும். இருந்தபோதும், இன்முகத்தாலும் அன்பான சொற்களாலும் நண்பர்களின் மனங்களில் இடம்பிடித்த நிஷத், மலாய்/முஸ்லிம் சமூக சுய உதவிக் குழுவான யாயாசான் மெண்டாக்கியில் வழிகாட்டியாகச் செயலாற்றி கடந்த ஆண்டு நவம்பரில் அதற்கான விருதையும் பெற்றார்.
தனி தொண்டு மூலம் குடும்ப உறுப்பினர்களைப் போன்ற அணுக்கமான நண்பர்களைப் பெற்றுள்ள நிஷத், “நல்ல நண்பர்களுடன் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது,” என்றார்.
பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் மனிதர்களை நிதானப்படுத்தக்கூடிய காலகட்டமாக ரமலான் திகழ்வதாக இந்த இணையர் கூறினர்.