அசாமியப் பாடகர் ஜுபீன் கார்க் சிங்கப்பூரில் காலமானார்

1 mins read
db2c36ee-14b8-41b4-87e9-f82e4c07406b
இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகரும் இசையமைப்பாளருமான ஜுபீன் கார்க் சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) உயிரிழந்தார். - படம்: இணையம்

அசாமின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ஜுபீன் கார்க் சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) காலமானார். அவருக்கு வயது 52.

செப்டம்பர் 20-21ஆம் தேதி வரையிலான ‘வடகிழக்கு இந்திய விழா’வில் பங்கேற்பதற்காகத் திரு ஜுபீன் சிங்கப்பூர் வந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை 16 பேருடன் அவர் செயின்ட் ஜான்ஸ் தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் நீச்சலடிக்கும்போது மூச்சுவிடச் சிரமப்பட்டு நீரிலிருந்து மீட்கப்பட்டார். உடனடியாக அவருக்கு இதய இயக்க மீட்புச் சிகிச்சை (சிபிஆர்) அளிக்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்குக் காவல்துறை செயின்ட் ஜான்ஸ் தீவில் உதவிக்காக அழைக்கப்பட்டதாகக் கூறியது.

உணர்வற்ற நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜுபின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் நீரில் மூழ்கி இறந்ததாக மரணச் சான்றிதழ் கூறுவதாக இந்திய ஊடகங்கள் பதிவிட்டுள்ளன. அவருடைய நல்லுடல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, வடகிழக்கு இந்திய விழாவில் இரு நாள்களும் நடைபெறவிருந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை நடக்கவிருந்த வர்த்தக, சுற்றுப்பயணச் சந்திப்புகளும் ரத்துசெய்யப்பட்டன.

அன்புள்ளத்தால் மக்களைக் கவர்ந்தவர்

அசாமிய, இந்தித் திரைப்படப் பாடல்களுக்குப் பெயர்பெற்ற ஸுபீன், தம் அன்புள்ளத்தால் பலரையும் கவர்ந்தவர்.

கௌகாத்தி கோவிலில் விலங்குகளை பலி கொடுப்பதற்கு எதிராகக் குரல்கொடுத்ததற்காக 2018ஆம் ஆண்டில் ‘பேட்டா (PETA) இந்தியா’ அமைப்பு அவருக்கு ‘விலங்குகளுக்கான நாயகர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.

குறிப்புச் சொற்கள்