காவல்துறையினரை தீப்பிழம்பைப் பாய்ச்சி காயப்படுத்த முயற்சித்தவர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 8ஆம் தேதி மாலை பாசிர் ரிஸ் பூங்காவில் ஆயுதத்துடன் இருந்த டிமத்தி ஹெங் ஷெங்ஸியானை காவல்துறையினர் மடக்கிப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர், காவல்துறை அதிகாரியான ஏஎஸ்பி சீ ஸியு குவானை நோக்கி தீப்பிழம்பைப் பாய்ச்சும் துப்பாக்கியால் காயப்படுத்த முயற்சி செய்தார்.
இதையடுத்து அவரை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட நேர்ந்தது. இதில் உயிர்பிழைத்த ஹெங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நவம்பர் 9ஆம் தேதி மருத்துவமனையிலேயே நீதிபதி முன்பு அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
காவல்துறை அதிகாரிக்கு மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் செயல்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஹெங், அதிகாரி சீயைக் காயப்படுத்தியதாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த அளவுக்கு அதிகாரி காயம் அடைந்தார் என்ற விவரமில்லை.
பறவைக் கண்காணிப்புக் கோபுரத்தின் விளிம்பில் ஒருவர் அமர்ந்திருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாசிர் ரிஸ் பூங்காவுக்குச் சென்றதாக நவம்பர் 8ஆம் தேதி அறிக்கையில் காவல்துறையினர் கூறியிருந்தனர்.
பறவைக் கண்காணிப்பு கோபுரத்திற்கு அருகே ஹெங் காணப்பட்டார். அவரை அதிகாரிகள் நெருங்கியபோது தீப்பிழம்பை பாய்ச்சும் சாதனத்தால் சுட்டார். அதிகாரிகள் ஆயுதத்தை கீழே போடுமாறு உத்தரவிட்டும் அதை மதிக்காமல் அதிகாரிகளை நோக்கி அவர் முன்னேறியதாகக் கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையில் 30 வயது காவல்துறை அதிகாரி ஒருவர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஹெங் தரையில் விழுந்ததும் அதிகாரிகள் அவரை சூழ்ந்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதில், 24 வயது காவல்துறை அதிகாரிக்கு சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது.
ஹெங்குக்கு இடது முன்கையிலும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையினர் அவருக்கு முதலுதவிகளைச் செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு துப்பாக்கிக் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஹெங்கின் வழக்கு நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

