எரிசக்தி விலை உயர்வால் பேருந்து நடத்துநர்களுக்கு கூடுதல் ஆதரவு குறித்து மதிப்பீடு

எரிசக்தி விலை உயர்வால் பேருந்து நடத்துநர்களுக்கு கூடுதல் ஆதரவு குறித்து மதிப்பீடு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Jun 2026 - 5:49 pm

2 mins read

ஈரான் போர் காரணமாக உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், உள்ளூர் பேருந்து நடத்துநர்களுக்கு கூடுதல் ஆதரவு தேவையா என்பது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் மதிப்பிட்டு வருகிறது.

“உயர்ந்த சந்தை விலைகளைத் தாண்டி, நடத்துநர்கள் தங்களின் டீசல் விநியோகத்தைப் பாதுகாப்பதற்காகக் கூடுதல் செலவுகளைச் சந்திப்பதை நாங்கள் கவனிக்கிறோம். பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, கூடுதல் ஆதரவு அவசியமா என்பதை நாங்கள் மதிப்பிடுவோம்,” என்று ஆணையம், செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 2) ஓர் ஊடக அறிக்கையில் கூறியது.

பேருந்து வழித்தடங்களை இயக்குவதற்காகப் பொதுப் பேருந்து நடத்துநர்களுக்கு ஆணையம் செலுத்தும் சேவைக் கட்டணம், டீசல் விலை உட்பட, சந்தை ஆற்றல் குறியீடுகளின் அடிப்படையில் சரிசெய்யப்படுகிறது. இது, எரிசக்தி விலை ஏற்ற இறக்கங்களின் பெரும் பாதிப்பிலிருந்து நடத்துநர்களைப் பாதுகாக்கிறது என்று ஆணையம் கூறியது.

பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் டீசல் மற்றும் மின்சாரச் செலவுகள் 80 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிரேஸ் வூ கூறினார்.

இதற்கிடையே, உலகளாவிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தைகளில் தொடரும் நிலையற்ற தன்மையானது காலப்போக்கில் இயக்கச் செலவுகளை அதிகரிக்கக்கூடும் என்பதால், எஸ்எம்ஆர்டி இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

நிலைமை மாறும்போது, ​​அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, போக்குவரத்து அமைச்சுடனும் ஆணையத்துடனும் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.

எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று, மத்திய கிழக்கு போரின் தாக்கம் குறித்த தனது தற்போதைய மதிப்பீடு தொடர்பாக மார்ச் 26ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறினார்.

பிற்காலத்தில் தலையிட வேண்டிய தேவை உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்காக, அரசாங்கம் இந்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் திரு சியாவ் கூறினார்.

டீசல் விலை உயர்வால் கடல் போக்குவரத்துத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல படகு நிறுவனங்கள் மார்ச் மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூருக்குச் சென்று வரும் பயணங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிவித்தன.

குறிப்புச் சொற்கள்
மத்திய கிழக்குஎண்ணெய்டீசல்