குடும்பக் கடன் ஏற்றம் கண்டாலும் சொத்துகள் அதனிலும் வேகமாக ஏறுகிறது

2 mins read
0e4fbbe3-f10d-47c4-881a-7ba2d62ad648
குடும்ப கடன்நிலைக்கும் தனிநபர் வருமானத்துக்கும் இடையேயான விகிதம் 12 காலாண்டுகளாக தொடர்ச்சியாக குறைந்து வந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடும்பக் கடன்நிலை சென்ற ஆண்டு ஏற்றம் கண்டபோதிலும், ரொக்கக் கையிருப்பு,நிறுவனப் பங்குகள் போன்றவை அதனிலும் வேகமாக வளர்ச்சி கண்டன என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவிக்கிறது.

இதற்குக் காரணம் ஊதிய உயர்வு நல்ல நிலையில் இருப்பதும், கடன்களைத் தாண்டி வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதுமே என்று நாணய ஆணையம் புதன்கிழமை (நவம்பர் 27ஆம் தேதி) தனது வருடாந்தர நிதிநிலை ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

உண்மையில், குடும்பக் கடன் தனிநபர் வருமானத்துடனோ அல்லது வரிக்குப் பிந்திய வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலோ இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 1.1 மடங்கு குறைந்திருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது குடும்பக் கடன் தொடர்ச்சியாக 12 காலாண்டுகளுக்கு குறைந்து வந்துள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவிக்கிறது.

மேலும், இவ்வாண்டு முதல் ஆறு மாதம் மொத்த குடும்ப வருமானம் ஏறக்குறைய 9 விழுக்காடு கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட $3 டிரில்லியன் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக ஆணையம் கூறியது.

எளிதில் திரட்டக்கூடிய சொத்துகளாக ரொக்கம், வைப்பு நிதி போன்றவை மொத்த கடன்களைவிட அதிகமாக உள்ளதாக ஆணையத்தின் அறிக்கை சுட்டியது. இவை இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த சொத்துகளில் 20 விழுக்காடு பங்களிப்பதாக அறிக்கை விளக்கியது.

இவற்றுடன், அடமானக் கடன்களின் வட்டி விகிதம் குறைந்துள்ளது என்றும் வருமான வளர்ச்சி உயர்ந்துவரும் நிலையில் சிங்கப்பூர் குடும்பங்களின் கடன்களை அடைக்கும் நிலை வலுவாகவே உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

குடும்பங்களின் மொத்த கடன்களில் 75 விழுக்காட்டுக் கடன்கள், வீட்டை அடமானமாகக் கொண்ட வீட்டுக் கடன்களாகும் என்று ஆணைய அறிக்கை விளக்கியது.

குறிப்புச் சொற்கள்