சிங்கப்பூரில் காது கேளாதோருக்கு அல்லது உடற்குறை உள்ளவர்களுக்கு உதவி அளிக்க விரைவில் அதிகமான உதவி நாய்கள் இருக்கும்.
அன்றாட நடவடிக்கைகளைச் சமாளிப்பதில் தங்களுடன் இருக்கும் சிறப்புத் தேவை உடையவர்களுக்கு இந்த நாய்கள் உதவுவதை உறுதிசெய்ய, பொது வீடமைப்பு, பொதுப் போக்குவரத்து, உணவு இடங்கள் ஆகியவற்றில் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படும்.
அத்தகைய இடங்களில் தற்போது பார்வையற்றோருக்கு வழிகாட்டும் நாய்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இருப்பினும், மற்ற உடற்குறை உள்ளவர்களுக்கான உதவி நாய்களுக்கும் இனி அனுமதி வழங்கப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் உடற்குறை உள்ளவர்களுக்கான உதவி நாய்கள் அவற்றின் பராமரிப்பாளர்களுடனும் அந்த வீடுகளில் தங்கலாம் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா ஜூன் 28ஆம் தேதி அறிவித்தார்.
“அத்தகைய உதவி நாய்களை பொதுப் போக்குவரத்திலும் உரிமம் பெற்ற உணவு நிலையங்களிலும் அனுமதிக்க, நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் உணவு அமைப்பு போன்ற அமைப்புகள் அதன் தொடர்பில் செயல்பட்டு வருகின்றன,” என்றார் திரு சுவா.
அவர் கே9உதவி பங்காளிகள் பாராட்டு நிகழ்ச்சியில் பேசினார்.
அதில், அரசாங்கம், அரசதந்திர, சமூக சேவை, வர்த்தகச் சமூகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

