பகுதி நேர பயிற்சி மேற்கொள்ளும் ஊழியர்களுக்குப் பணியிடைக்கால பயிற்சிப் படித்தொகை (Mid-Career Training Allowance) அடுத்த மாதம் முதல் நீட்டிக்கப்படும்.
தொழில்துறைக்கு ஏற்ற வகுப்புகளை உள்ளடக்கும் வகையில் அந்தப் படித்தொகை விரிவுபடுத்தப்படும்.
இந்த அறிவிப்புடன், ஊழியரணியை ஆதரிக்கும் கொள்கைகள் சிலவற்றைப் பிரதமர் லாரன்ஸ் வோங், வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தமது வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவித்தார்.
பணியிடைக்கால ஊழியர்களுக்குப் புதிய திறன்களைக் கற்க உதவும் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் லெவல் அப்’ திட்டம் 2024ல் தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த திரு வோங், அதன் முடிவுகள் ஊக்கமளிப்பதாகக் கூறினார்.
“இதற்கான ஆள்சேர்ப்பு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. 40 வயதுக்கும் அதிகமான 60,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள், பயன்மிகுந்த பயிற்சி வகுப்புகளின் வழி ஏற்கெனவே பலனடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
திட்டத்தின் வழி நன்மையடைந்தோரில் ஒருவரான திரு ஜெஃப்ரி லோ என்பவரைப் பிரதமர் குறிப்பிட்டார். திறன் மேம்பாட்டுக்குப் பின்னர் திரு லோ, சாங்கி விமானக் குழுமத்தில் சேவை முனைய நிர்வாகியாகச் (Duty Terminal Manager) செயலாற்றுவதாகவும் திரு வோங் கூறினார்.
18 ஆண்டுகளாக விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றிய பிறகு, திறன்மேம்பாடு செய்யவும் தமது விருப்பத்திற்கு ஒத்துப்போகக்கூடிய புதிய வாய்ப்புகளை நாடவும் திரு லோ ஆர்வமாக இருந்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் மின்னிலக்கப் படைப்பு நிர்வாக வகுப்பில் சேர்ந்த அவரது கட்டணங்கள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சலுகைகளால் குறைக்கப்பட்டன. அத்துடன், மூன்று மாதங்கள் நீடித்த அந்த வகுப்பில் அவர் பணியிடைக்கால பயிற்சி படித்தொகையைப் பெற்றார். இது அவரது அன்றாடச் செலவுகளுக்குக் கைகொடுத்தது, என்று திரு வோங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
முதியோரை ஆதரிக்கும் வேலையிடங்களுக்கு நீடித்த ஆதரவு
மூத்த ஊழியர்களை ஆதரிக்கும் வகையில் அவர்களை ஆதரிக்கும் முதலாளிகளுக்காக மூத்தோர் வேலை நியமன உதவித்தொகை (Senior Employment Credit) 2027ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படும் என்றார் திரு வோங்.
நன்முறையில் தொடர்ந்து பங்களிக்க மூத்தோர்க்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் எனக் கூறிய திரு வோங், அவரது வாழ்க்கைத் தொழிலின் பிற்காலப்பகுதிக்காகத் திட்டமிட உதவுவது, மூப்புக்கு ஏற்ற வகையிலான வேலைகளை வடிவமைப்பது, பல தலைமுறை வேலையிடங்களை உருவாக்குவது போன்றவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
“இதன் தொடர்பில் மனிதவள அமைச்சு, மூத்த ஊழியரணி வேலைவாய்ப்புக்கான முத்தரப்புப் பணிக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும்,” என்றும் பிரதமர் வோங் கூறினார்.

