பணிப்பெண் முகவை நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராகப் பணிபுரிந்த 45 வயது சாய் சொங் லின், வாடிக்கையாளர்களிடமிருந்து $92,000 ரொக்கத்தைச் சுருட்டினார்.
அக்குற்றத்திற்காக அவருக்கு 20 மாதங்கள், இரு வாரச் சிறைத்தண்டனை திங்கட்கிழமை (ஜனவரி 5) விதிக்கப்பட்டது.
மலேசியரான சாய், தனது தனிப்பட்ட ‘பேநவ்’ கணக்கைத் தான் பணிபுரிந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதுபோல் வாடிக்கையாளர்களிடம் காட்டியதாகவும் சேவைக்கான பணத்தை அதில் செலுத்துமாறு அவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ‘ஃபர்ஸ்ட் ஆல்பெஸ்ட் ஹியூமன் ரிசோர்ஸ்’ நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார்.
ஐந்து மாத காலகட்டத்தில் அவர் இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாயின் சேவை விற்பனை அளவு அதிகமாக இருந்தபோதும் வருமானம் குறைவாக இருப்பதை அவரது மேலாளர் கண்டுபிடித்தார்.
அதனையடுத்து நடத்திய விசாரணையில் 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஏமாற்றியதை சாய் ஒப்புகொண்டார்.

