‘ஏஐ’ யுகத்தில் சட்டப் பொறுப்புகள் குறித்த அனுமானங்களுக்கு மறுபரிசீலனை தேவை: பிரதமர்

‘ஏஐ’ யுகத்தில் சட்டப் பொறுப்புகள் குறித்த அனுமானங்களுக்கு மறுபரிசீலனை தேவை: பிரதமர்

3 mins read
062eb134-c3a2-47bc-a369-122bdec01b09
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் புங் ஹாவ் சட்டப் பள்ளியில் நடைபெற்ற ‘எஸ்ஜிலா200’ இளையர் கருத்தரங்கில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இயந்திரங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஓர் உலகத்திற்காகச் சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்புகள் வடிவமைக்கப்படவில்லை. எனவே, வருங்காலத்தில் பொறுப்பு, கடமை, கடப்பாடு ஆகியவை குறித்த நாட்டின் அடிப்படை அனுமானங்கள் சிலவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மே 13) தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகம் இத்தகைய கேள்விகளை எதிர்கொண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அதே வேளையில், சட்டம் என்பது அடிப்படையில் மனிதர்களின் முடிவுகளைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் சட்ட அமைப்பின் 200வது ஆண்டுநிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் புங் ஹாவ் சட்டப் பள்ளியில் நடைபெற்ற ‘எஸ்ஜிலா200’ (SGLaw200) இளையர் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் புங் ஹாவ் சட்டப் பள்ளியில் நடைபெற்ற ‘எஸ்ஜிலா200’ இளையர் கருத்தரங்கில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் புங் ஹாவ் சட்டப் பள்ளியில் நடைபெற்ற ‘எஸ்ஜிலா200’ இளையர் கருத்தரங்கில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்ட அமைச்சு, கொள்கை ஆய்வுக் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் சட்ட அமைப்பின் அடிப்படை நெறிமுறைகள், மேம்படுத்தப்பட வேண்டிய கூறுகள், அனைத்துலகச் சட்டத்தின் ஆட்சி போன்றவை குறித்தும் பிரதமர் பேசினார்.

உலகளாவிய சட்ட அமைப்புகள் ஈடுகொடுக்கும் வேகத்தைவிடச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதாகத் திரு வோங் குறிப்பிட்டார். இதன் விளைவாக, அதிநவீன மோசடிகள், ‘டீப்ஃபேக்’ காணொளிகள், போலித் தகவல்கள் ஆகியவை அதிகரித்து வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சிங்கப்பூரின் சட்டங்களை மறுஆய்வு செய்வது எளிதான செயலாக இருக்காது என்றார் பிரதமர் வோங்.

“மிக மெதுவாகச் செயல்பட்டால், சட்டம் பின்தங்கி மக்கள் பாதிக்கப்படக்கூடும். மிக வேகமாகச் செயல்பட்டால், புத்தாக்கம் முடங்கக்கூடும். பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் இடையிலும், கட்டுப்பாட்டுக்கும் படைப்பாற்றலுக்கும் இடையிலும் நாம் சரியான சமநிலையை ஏற்படுத்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மருத்துவத்தில் தவறான நோயறிதல், தானியக்க வாகன விபத்துகள் போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த அசம்பாவிதங்கள் நிகழும்போது அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்ற கேள்வியைச் சட்டத்துறை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.

“பொறுப்பு, நியாயம், நீதி ஆகியவை தொடர்பான முடிவுகளை முழுமையாக இயந்திரங்களிடம் ஒப்படைக்க முடியாது. இவை மனிதர்கள் முடிவெடுக்க வேண்டிய அம்சங்கள்,” என்று பிரதமர் கூறினார்.

சிங்கப்பூரின் சட்டம், நடைமுறைச் சாத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது. பல்லின மக்களைக் கொண்ட சிறிய நாடான சிங்கப்பூருக்கு நிலைத்தன்மை என்பது ஓர் அடிப்படை வாழ்வாதாரத் தேவை என்றார் பிரதமர்.

ஊழலைச் சகித்துக்கொள்ளாமை, போதைப்பொருள் வழக்குகளில் உள்ள கடுமையான சட்டங்கள் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது என அவர் கூறினார். அதே வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குதல், மரண தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தானாகவே அந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் நடைமுறை எனப் பல பாதுகாப்பம்சங்களும் இங்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“சட்டத்தின் ஆட்சி என்பது ஒருமுறை உருவாக்கிவிட்டுத் தானாகவே இயங்க விட்டுவிடும் ஓர் இயந்திரமன்று. அது மக்களிடையே உள்ள தொடர்ச்சியான சமூக ஒப்பந்தம். அமைப்பு நியாயமானது என மக்கள் நம்பவேண்டும். அந்த நம்பிக்கை இல்லையென்றால், எவ்வளவு வலுவான சட்டங்களும் நிலைக்காது,” என்று அவர் கூறினார்.

இணையச் சட்டங்களைப் பொறுத்தவரை, வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளுக்கும் இணையப் பொய்களுக்கும் எதிராகச் சிங்கப்பூரில் கடுமையான சட்டங்கள் உள்ளன. முன்பு அதிக தளர்வுகளைக் கொண்டிருந்த சமூகங்கள்கூட தற்போது இதே சவால்களை எதிர்கொள்வதால் தங்கள் சட்டங்களைக் கடுமையாக்குகின்றன என்றார் அவர்.

அனைத்துலக அரங்கில் பல நாடுகள் தன்னிச்சையாகச் செயல்படுவதால் கடந்த நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளே முதலில் பாதிக்கப்படும் என்றும் பிரதமர் எச்சரித்தார். எனவே, கடல்வழி வர்த்தகத்தை நம்பியிருக்கும் சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கு அனைத்துலகச் சட்டங்கள் மிகவும் இன்றியமையாதவை என்றார் அவர்.

இந்தச் சவால்களைச் சமாளிக்க, ஒருமித்த சிந்தனையுடைய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு அனைத்துலக விதிகளைப் பாதுகாக்கச் சிங்கப்பூர் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் புங் ஹாவ் சட்டப் பள்ளியில் நடைபெற்ற ‘எஸ்ஜிலா200’ இளையர் கருத்தரங்கில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் புங் ஹாவ் சட்டப் பள்ளியில் நடைபெற்ற ‘எஸ்ஜிலா200’ இளையர் கருத்தரங்கில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இத்தகைய உள்ளூர், அனைத்துலகச் சவால்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர் வோங், சட்ட அமைப்பு என்பது அப்படியே தேங்கிவிடும் ஒன்றன்று, அது தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டிய ஒன்று எனத் தமது உரையின் இறுதியில் வலியுறுத்தினார்.

“உங்கள் பணி இந்தக் கட்டமைப்பை மாற்றாமல் அப்படியே பாதுகாப்பதன்று. மாறாக, அதனை மாற்றுவதும், வலுப்படுத்துவதும், எதிர்காலச் சவால்களுக்கு ஏற்பப் பொருத்தமானதாக வைத்திருப்பதுமே உங்கள் பணியாகும்,” என்று கருத்தரங்கில் பங்கேற்ற இளையர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்