வரவுசெலவுத் திட்ட உபரி மதித்திறன் மட்டுமன்று, நாட்டின் பாதுகாப்பு அரண்: அமைச்சர் இந்திராணி

வரவுசெலவுத் திட்டம் 2026 மீதான விவாதம் நிறைவுபெற்றது

வரவுசெலவுத் திட்ட உபரி மதித்திறன் மட்டுமன்று, நாட்டின் பாதுகாப்பு அரண்: அமைச்சர் இந்திராணி

3 mins read
94a000d5-0761-4ab0-97c2-0a8d38289699
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தொடங்கிய வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நிறைவுபெற்றதை அடுத்து உரையாற்றிய பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

உலகில் ஒவ்வொரு நாளும் மாறிவரும் சூழ்நிலைகளைக் கவனிக்கும்போது, சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்ட உபரி என்பது வெறும் கவனமான நிதித் திட்டமிடலின் விளைவு மட்டுமன்று; சாத்தியமான பொருளியல் கொந்தளிப்புகளைக் கையாளுவதற்குத் தேவையான உறுதியையும் அமைதியான நம்பிக்கையையும் வழங்கும் பாதுகாப்பு அரண் அது என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் சாதனை அளவிலான $154.7 பில்லியன் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நிறைவுபெற்றது.

2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட உபரி, எதிர்பார்த்ததைவிட அதிகமாக $15.1 பில்லியனாகப் பதிவாகி இருந்தது.

இது குறித்து அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதை அவையில் சுட்டினார் குமாரி இந்திராணி.

‘‘பிப்ரவரி 12ஆம் தேதி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்த மூன்று வாரங்களுக்குள்ளாகவே உலகளாவிய சூழல்கள் மீண்டும் மாறின. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க, மறுநாளே அவர் வரிகளை இரட்டிப்பாக்கினார்; இது மற்றொரு பொருளியல் நிச்சயமற்ற நிலையைத் தூண்டியது.

“அதேபோல பிப்ரவரி 26ஆம் தேதி, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே வெடித்த மோதல்கள், பிப்ரவரி 28ல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த தாக்குதல்கள் என உலகம் மீண்டும் நிச்சயமற்ற நிலைக்குச் சென்றவிட்டது,” என விவரித்த குமாரி இந்திராணி, “இந்த முன்னேற்றங்கள் ஒட்டுமொத்த நிச்சயமற்ற நிலையை அதிகரித்துள்ளன,’’ என்றார்.

சிங்கப்பூரர்களுக்காகச் செயல்படும் திறன் அரசாங்கத்திடம் உள்ளது

‘‘இதனால் வர்த்தக முதலீடு சார்ந்த வணிகக் கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டியிருக்கலாம். எரிசக்தி விலைகள் பாதிக்கப்படலாம். அப்படி நிகழ்ந்தால் அதன் தாக்கம் அன்றாட வாழ்க்கைச் செலவுகளிலும் பிரதிபலிக்கும்,’’ என்ற அமைச்சர், அவ்வகையில் சிறிய, வெளிப்படையான பொருளியலான சிங்கப்பூர் இதன் பாதிப்புகளைக் கடுமையாக உணரும் என்றும் குறிப்பிட்டார்.

எனினும் சாத்தியமான சவால்களை எதிர்கொள்ளத் தேவையான பலத்துடன் சிங்கப்பூரர்களுக்காகச் செயல்படும் திறன் அரசாங்கத்திடம் உள்ளதாகச் சொன்ன நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி, நாட்டின் நிதிக் கட்டுப்பாடு தொடர்பான அணுகுமுறை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

வரவுசெலவுத் திட்டம், புதுப்பிக்கப்பட்ட பொருளியல் உத்தியைச் செயல்படுத்தவும் ஊழியர் சார்ந்த அம்சங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி,  வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏதுவான வளர்ச்சிக்கு வித்திடவும் அரசுக்குக் கைகொடுக்கும். 

குடும்பங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தவும் தேசத்தின் பாதுகாப்பு நிலைத்தன்மையை மேம்படுத்தவும் அது வழிவகுக்கிறது என்ற குமாரி இந்திராணி, ‘‘இத்திட்டம் நாட்டின் மொத்தக் கருவளவிகிதம் ஆகக் குறைவாக சரிந்ததையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

‘‘இது திருமணம், பெற்றோர் தொடர்பான அணுகுமுறைகளை நாடுதழுவிய முறையில் மறுசீரமைக்க வேண்டியுள்ளதையும் காட்டியுள்ளது,’’  என்றார்.

இதுவரை தாக்கல் செய்யப்பட்டதில் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டதே மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டம் என்று குறிப்பிட்ட குமாரி இந்திராணி, கடுமையான மாற்றங்களுக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் உள்ளாகியிருக்கும் உலகச் சூழலில் அது தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

நெருக்கடிகளும் மாற்றங்களும் நிறைந்த உலகில், சிங்கப்பூர் பாதுகாப்பான, நிலையான இடமாகத் தனித்து நிற்பதாக உரைத்த அவர், இது தற்செயலாக நடந்ததன்று என்றார்.

‘‘தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில், நிதி சார்ந்த மதித்திறன், தொலைநோக்குத் திட்டமிடல், மாற்றங்களின் திசையில் பயணம் செய்ய ஏதுவாகப் புதிய வழிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களின் விளைவு இது,’’ என்று விவரித்தார்.

அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை நல்ல பலனைத் தந்துள்ளது. ‘‘நாட்டின்  நிதியிருப்பு,  உபரி நிதி ஆகியவை நாம் நன்றியுடன் போற்ற வேண்டிய அம்சங்கள்’’ என்றும் குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்