சிங்கப்பூரில் $201 மில்லியன் முதலீடு செய்த ஏஸ்டர் நிறுவனம்

2 mins read
33178c0f-d75f-4342-859d-eee0903dffeb
புக்கோம் சுத்திகரிப்பு நிலையம் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 237,000 பேரல் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்கிறது. - படம்: ஏஸ்டர்

ஏஸ்டர் கெமிக்கல்ஸ் மற்றும் எரிசக்தி நிறுவனம் (Aster) சிங்கப்பூரில் உள்ள தனது புக்கோம் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவுள்ளது. அதற்காக அந்நிறுவனம் 201 மில்லியன் வெள்ளி (US$155மி.) முதலீடு செய்துள்ளது.

இந்த முதலீடு மூலம் எரிசக்தி விநியோகம் மேலும் சீராகவும் மீள்திறன்மிக்கதாகவும் இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முதலீட்டில் ஒரு பகுதியான 97 மில்லியன் வெள்ளி சுத்திகரிப்பு பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 300,000 பேரலுக்கு மேலான கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்யமுடியும் என்று ஏஸ்டர் கூறியது.

மற்ற நிதி, உயவு எண்ணெய் (Lube Oil) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாகவும் நம்பகமான மேம்படுத்தல் பணிக்காக அது பயன்படுத்தப்படும்.

இந்த முதலீட்டின்மூலம் தரமான உயர்ரக எண்ணெய் தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் தயாரிப்புகள் தொழிற்சாலை, கப்பல், கார் துறைகள் ஆகியவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

புதிதாகக் கிடைத்த முதலீட்டால் புக்கோம் சுத்திகரிப்பு நிலையத்தின் போக்குவரத்து தொடர்புச் சங்கிலியும் மேம்படுகிறது. பொருள்களை வேகமாக ஏற்றுமதி செய்யவும் அதேபோல் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்யவும் அது உதவும்.

பொதுவாக புக்கோம் சுத்திகரிப்பு நிலையத்தின் ஏற்றுமதிகள் இந்தோனீசியாவின் சந்தரா அஸ்ரிஸ் சிலிகோன் நிலையத்திற்குச் செல்லும். அதேபோல் சிலிகோன் நிலையத்திலிருந்து புக்கோம் நிலையத்திற்கு ‘பைரோலிசிஸ்’ எரிபொருள் இறக்குமதி செய்யப்படும்.

இரு நிலையங்களும் தங்களுக்கு வேண்டிய துணைப் பொருள்களை வேகமாகத் தயாரித்து மாற்றிக்கொள்வதால் தரமான முழுமையான பொருள் தயாரிக்கப்படுகிறது என்று ஏஸ்டர் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டில் புக்கோம் சுத்திகரிப்பு நிலையம் முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல் டீசல் தொடர்பான பொருள்களைச் சுத்திகரிப்பு செய்வதை புக்கோம் நிலையம் நிறுத்தியது.

தற்போதைய நிலவரப்படி புக்கோம் சுத்திகரிப்பு நிலையம் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 237,000 பேரல் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்கிறது.

குறிப்புச் சொற்கள்