இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்து சோதிடச் சேவைகள் வழங்கிய அலம் நரசிம்மா என்ற 58 வயது ஆடவர், தம்மை நம்பி வந்தோரிடம் இருந்து $38,000 ரொக்கத்தையும் நகைகளையும் மோசடி செய்த இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
நீதிமன்றத்தில் அவருக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) விதிக்கப்பட்டது. கடந்த 2024ஆம் ஆண்டில் இங்கு வந்து, தன்னைச் சோதிடர் என்று கூறிக்கொண்டு அவர் நான்கு பேரை ஏமாற்றினார். தீய சக்திகளை விரட்ட இந்தியாவில் சடங்குகள் நடத்தப்போவதாகத் தம்மிடம் வந்தோரிடம் அவர் தெரிவித்தார்.
இணையத்தில் கிடைத்த படங்களைக் கொண்டு தம்மை நாடி வந்தவர்களை நரசிம்மா நம்பவைத்தார். அவ்வாறு அவரைப் பார்க்கச் சென்ற ஒருவர் சந்தேகப்பட்டு, காவல்துறையில் புகார் அளித்தார்.
நரசிம்மா சார்பில் வாதாடிய வழக்கறிஞர் திரு பாலமுருகன், சோதிடர் என்ற நிலையில் தன் சொந்த வாழ்க்கையைக் கணிக்கத் தவறிவிட்டதாக அவரைக் கைகாட்டி குறிப்பட்டது நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தது.

