‘கோ-அஹெட்’ பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 3 மாதங்களில் 2வது சம்பவம்

‘கோ-அஹெட்’ பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 3 மாதங்களில் 2வது சம்பவம்

1 mins read
ee526003-f3a4-420a-a652-f4a8db4c73e3
பணியில் இருந்த தனது ஓட்டுநர் தாக்கப்பட்டதாக கோ-அஹெட் நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) குறிப்பிட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சாங்கி வில்லேஜ் முனையத்திலிருந்து கம்போங் பாரு முனையம் நோக்கிச் செல்லும் கோ-அஹெட் (Go-Ahead) சேவை எண் 2 பேருந்தை ஓட்டிச் சென்றபோது, பயணியால் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி பிற்பகல் 5.20 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) கோ-அஹெட் நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.

தாக்குதலால் பேருந்துச் சேவை தடைபட்டதுடன், காயமடைந்த ஓட்டுநர் சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ஓட்டுநர் தற்போது மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார், அவருக்கு முழு ஆதரவை வழங்கி வருவதாகவும், சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்தது.

மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாகத் தனது பேருந்து ஓட்டுநர் ஒருவர் பணி நேரத்தில் தாக்கப்பட்டதாகப் பொதுப் பேருந்து நிறுவனமான ‘கோ-அஹெட்’ தெரிவித்தது.

பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்கள் பணியில் இருக்கும்போது வன்முறையையோ வசைபாடுகளையோ எதிர்கொள்ளக் கூடாது என்றும் கோ-அஹெட் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, மே 23ஆம் தேதி இதே ‘சேவை எண் 2’ பேருந்தை ஓட்டிச் சென்ற மற்றொரு ஓட்டுநர், இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்ட ஆத்திரத்தில் பயணி ஒருவரால் தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டுத் தாக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பேருந்துஓட்டுநர்தாக்குதல்பயணிகள்