வழக்கறிஞர்கள் வேலையிலிருந்து விலகுவதைத் தடுக்க முயற்சி

நீதித்துறையும் வழக்கறிஞர் சங்கமும் கூட்டுக் குழுவை நிறுவுகின்றன

வழக்கறிஞர்கள் வேலையிலிருந்து விலகுவதைத் தடுக்க முயற்சி

2 mins read
37b22b37-beb9-4898-8c49-f0dcf4ea3197
ஆய்வு முடிவுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சு கூறியுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வழக்கறிஞர்கள், வேலையிலிருந்து விலகுவது உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கான காரணங்களை ஆராய்வதற்காகப் புதிய பணிக்குழு அமைக்கப்படவிருக்கிறது. நீதித்துறையும் வழக்கறிஞர் சங்கமும் இணைந்து கூட்டுக் குழுவை நிறுவவுள்ளன.

வழக்கறிஞர் சங்கத்திற்கும் நீதிமன்றங்களின் தலைமைத்துவத்திற்கும் இடையில் நடைபெற்ற வழக்கமான கலந்துரையாடல்களின்போது முன்வைக்கப்பட்ட அக்கறைகளில் இந்தப் பிரச்சினைகளும் அடங்கும். வழக்கறிஞர் சங்கம் மேற்கொண்ட நான்காண்டு ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிடப்பட்டன.

நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடு, நீதிபதிகளுடனான கருத்துப் பரிமாற்றம் முதலியவை மனவுளைச்சலை ஏற்படுத்துவதாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில், நடத்தை குறித்து இரண்டு புகார்கள் பெறப்பட்டதாக நீதிமன்றங்களின் பேச்சாளர் கூறினார். இரண்டுமே முழுமையாய் விசாரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“நடத்தை குறித்த புகார்களைத் தெரிவிப்பதற்கான எங்களின் அதிகாரபூர்வ, சுதந்திரமான நடைமுறை தொடர்ந்து செயல்படுவதோடு அணுகக்கூடிய நிலையிலும் உள்ளது,” என்றார் பேச்சாளர். கருத்துத் தெரிவிப்பதற்குரிய வழிகளும் கலந்துரையாடல் கட்டமைப்புகளும் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதையும் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவுக்கு உள்ளதா என்பதையும் கூட்டுக் குழு ஆராயும் என்றும் அவர் சொன்னார்.

“தொழிலை விட்டு வழக்கறிஞர்கள் ஏன் வெளியேறுகின்றனர் என்பதற்கும் அவர்களை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதற்கும் சட்டத்துறையிடம் தற்போது முறையான ஆதாரங்கள் உள்ளன” என்று அறிக்கையின் சுருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் வேலையைவிட்டுச் செல்வது தனிமனிதர்களின் குறைபாடுகளால் ஏற்படுவதல்ல; மாறாக, பல ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் கட்டமைப்புகளாலும் கலாசாரச் சூழல்களாலுமே அது உண்டாகிறது என்றும் அறிக்கை தெரிவித்தது.

தனியார் துறையைவிட்டு வழக்கறிஞர்கள் விலகுவதற்கு வேலையிடக் கலாசாரமும் அதனால் ஏற்படுகின்ற மோசமான மனவுளைச்சலுமே முக்கியக் காரணங்கள் என்று ஆய்வு சுட்டியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தற்போதைய தீர்வுகள், அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பது போல் தோன்றுவதால் அவை தோல்வியடைவதாகவும் இந்த நிலைக்குக் காரணமான அடிப்படைச் சிக்கல்கள் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய ஆதாரங்கள், ஒட்டுமொத்தச் சட்டத்துறைக் கட்டமைப்பிலும் அணுக்கமான ஒத்துழைப்புத் தேவை என்பதைக் காட்டுகின்றன என்றும் ஆய்வு குறிப்பிட்டது.

இந்நிலையில், ஆய்வு முடிவுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்