மே 31ஆம் தேதி முடிவடைந்த ஆறு வார கால நடவடிக்கையின் போது, காவல்துறை 145க்கும் மேற்பட்ட மோசடி முயற்சிகளை முறியடித்து, $4.2 மில்லியனுக்கும் அதிகமான உத்தேச இழப்புகளைத் தடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 2) வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கைக்காக, ‘காயின்பேஸ்’, ‘காயின்ஹாகோ’, ‘ஜெமினி’, ‘இன்டிபென்டன்ட் ரிசர்வ்’, ‘ஓகேஎக்ஸ்’, ‘ஸ்ட்ரெய்ட்ஸ்எக்ஸ்’, ‘யூபிட்’ ஆகிய ஏழு மின்னிலக்க நாணய (கிரிப்டோகரன்சி) பரிமாற்றங்களுடன் தாங்கள் கூட்டு சேர்ந்ததாகக் காவல்துறை கூறியது.
இதை ஒரு ‘தீவிரமான’ நடவடிக்கை என்று குறிப்பிட்ட காவல்துறை, அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம், முதலீடு, வேலை மற்றும் காதல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு மோசடி வகைகளில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண, ‘செயின்அனாலிசிஸ்’ மற்றும் ‘டிஆர்எம் லேப்ஸ்’ போன்ற தொழில்துறை முன்னணி நிறுவனங்களின் கருவிகளைப் பயன்படுத்தி, தங்களது அதிகாரிகள் மேம்பட்ட ‘பிளாக்செயின்’ பகுப்பாய்வை மேற்கொண்டதாகத் தெரிவித்தது.
பகுப்பாய்வுத் திறன்கள், பாதிக்கபடும் சாத்தியமுள்ளவர்களை விரைவாக அடையாளம் காணவும், இழப்புகள் அதிகரிப்பதற்கு முன்பே தலையிடவும் அதிகாரிகளுக்கு உதவியதாக காவல்துறை கூறியது.
இதற்கிடையில், மின்னிலக்க நாணய பரிமாற்ற நிறுவனங்கள் சரியான நேரத்தில் வாடிக்கையாளர் தகவல்களை வழங்கியதன் மூலம், தொலைபேசி மற்றும் நேரில் 145 இலக்கு வைத்து தலையீடுகளை மேற்கொள்ள முடிந்தது.
இது மின்னிலக்க நாணய பரிமாற்ற நிறுவனங்களுக்கும் காவல்துறையின் மோசடி தடுப்பு மையம் மற்றும் இணைய புலனாய்வுப் பிரிவுக்கும் இடையிலான இரண்டாவது கூட்டு நடவடிக்கையாகும்.
“இரண்டாவது நடவடிக்கையால், மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் நீடித்த பொது-தனியார் பங்காளித்துவங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
“மோசடிகள் நுட்பத்திலும் அளவிலும் தொடர்ந்து வளர்ந்து வருவதால், காவல்துறையின் புலனாய்வு மற்றும் தொழில்நுட்பத் திறன்களுடன் மின்னிலக்க நாணய பரிமாற்ற நிறுவனங்களின் ஆதரவை இணைப்பது, மோசடி நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிவதிலும், பொதுமக்களை நிதி ரீதியான பாதிப்பிலிருந்து பாதுகாப்பதிலும் ஒரு சிறந்த அணுகுமுறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று காவல்துறை கூறியது.

