சீமெய் வட்டாரத்தில் உள்ள நாணய மாற்றுக் கடை ஒன்றில் ஆடவர் ஒருவர் திருட முயற்சி செய்தார்.
அவர்மீது திங்கட்கிழமை (ஏப்ரல் 13) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஏப்ரல் 10ஆம் தேதி மாலை 4.20 மணிவாக்கில் சீமெய் ஸ்திரீட் 6ல் உள்ள நாணய மாற்றுக் கடைக்கு 58 வயது லியோங் காக் கியோங் சென்றார்.
மலேசியரான அவர், ஒரு தாளில், “அமைதியாக இருக்கவும். சிங்கப்பூர் வெள்ளி, மலேசிய ரிங்கிட், அமெரிக்க டாலர் ஆகிய அனைத்தையும் கொடுக்கவும். அசையக் கூடாது,” என எழுதி கடையில் உள்ளவரிடம் கொடுத்தார்.
லியோங்கின் கோரிக்கையைக் கடையில் இருந்தவர் மறுத்தார். அதையடுத்து, சம்பவ இடத்திலிருந்து அந்த மலேசிய ஆடவர் தப்பிச் சென்றார்.
கடையில் இருந்தவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை, பணம் ஏதும் திருடப்படவில்லை. பின்னர், அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார். லியோங்கும் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
லியோங் மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருட்டுக் குற்றத்திற்கு, ஒருவருக்கு இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், குறைந்தது ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

