அப்பர் தாம்சன் பகுதியில் தொடரும் வீடு புகுந்து கொள்ளை முயற்சி

அப்பர் தாம்சன் பகுதியில் தொடரும் வீடு புகுந்து கொள்ளை முயற்சி

2 mins read
69916c21-ee82-422d-a986-941b55f354d7
மேரிகோல்ட் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் முகமூடி அணிந்த ஆடவர் நுழைந்தார். ஆனால், அந்நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்தவர் அலறியதால் அவர் தப்பியோடினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெக்ரிட்சி நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள தரை வீடு ஒன்றுக்குள் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 21) முகமூடி அணிந்த நபர் ஒருவர் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு அதே போன்ற மற்றொரு சம்பவம் அப்பகுதியில் நடந்ததாகக் காவல்துறை கூறியது.

மேரிகோல்ட் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் முகமூடி அணிந்த ஆடவர் நுழைந்தார். ஆனால், அந்நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்தவர் அலறியதால் அவர் தப்பியோடினார். இதற்குச் சில நாள்களுக்கு முன்னதாக, பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 7.50 மணியளவில், தாமான் பெர்மாத்தா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இதே போன்று உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறைச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த இரண்டு வீடுகளும் அப்பர் தாம்சன் சாலைக்கு அருகில், மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதிக்குப் பக்கத்தில் உள்ளன. இரு வீடுகளுக்கும் இடையிலான தூரம் ஏறத்தாழ நான்கு நிமிட கார் பயணமே.

40 ஆண்டுகளாக மேரிகோல்ட் டிரைவில் வசித்து வரும் பெண் ஒருவர் தமது வீட்டிற்குள் முகமூடி அணிந்து புகுந்த நபர் எவ்வித பயமும் இன்றி கொள்ளை முயற்சியில் இறங்கியதாகக் கூறினார். வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்தும் அவர் உள்ளே நுழைந்ததை அப்பெண் சுட்டினார்.

திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 23) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் பேசிய அவர், “அவர்களுக்கு இருக்க இருக்க பயமே இல்லாமல் போகிறது. பொதுவாகத் திருடர்கள் உரிமையாளர்களைத் தவிர்க்க காலியாக இருக்கும் வீடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் என் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்த போதிலும் அவர் எங்களைக் குறிவைக்க முடிவு செய்தார்,” என்று கூறினார். கருப்பு முகமூடி, தொப்பி மற்றும் நீண்ட கை சட்டை அணிந்திருந்த அந்த நபர் வீட்டிலிருந்து எதையும் திருடவில்லை.

இந்தச் சம்பவங்கள் 2024ஆம் ஆண்டில் தரை வீடுகளில் நடந்த வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. அப்போது சீனாவைச் சேர்ந்த இருவர் வின்ட்சோர் பார்க் சாலைப் பகுதியில் $570,000 மதிப்பிலான நகைகளைத் திருடினர். 2024 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ரயில் பாதை, புக்கிட் தீமா சாலை மற்றும் வின்ட்சோர் பார்க் சாலைக்கு அருகிலுள்ள வீடுகளில் 10 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகின. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் சிங்கப்பூரை விட்டு வெளியேறிய மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்