இன்றைய இளம் சிங்கப்பூரர்களுக்குப் பல்வேறு தெரிவுகள் உள்ளன. எனவே, ஆளுங்கட்சி தொடர்ந்து தாக்குப்பிடிப்பதற்கு இளையர்களை மக்கள் செயல் கட்சி (மசெக) ஈர்ப்பது ஒரு முக்கியத் தேவையாகும் என்று அக்கட்சியின் இளையரணித் தலைவர் ஆல்வின் டான் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் ஏற்கெனவே 21 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் 11 கட்சிகள் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டன. சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, பாட்டாளிக் கட்சி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தங்களது அணிகளுக்கு இளையர்களை ஈர்த்து வருவதை திரு டான் சுட்டிக்காட்டினார்.
சனிக்கிழமை (ஜூலை 4) மசெக இளையரணியின் 40வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் திரு டான் இதனைத் தெரிவித்தார்.
தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சருமான திரு டான், மற்ற கட்சிகளுக்குப் பதிலாக மசெகவைத் தேர்ந்தெடுக்குமாறு இளையர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு கட்சி உழைக்க வேண்டும் என்றார். ஒருவேளை அப்படிச் செய்யத் தவறினால், கட்சி 'கைவிடப்படுவதற்குத் தகுதியானதுதான்’ என்றார் அவர்.
இளையர்களைக் கட்சியில் சேர்ப்பதற்கான மசெகவின் முயற்சியில் மசெக இளையரணி முக்கியப் பங்கு வகிப்பதாக திரு டான் சொன்னார்.
இனிவரும் காலங்களில், தலைமைத்துவத்தை மேம்படுத்துவதில் இளையரணி கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார். அதாவது, தனது கட்டமைப்பில் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கட்சியில் சேர்த்து, அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அவர் விவரித்தார்.
இந்நிலையில், மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,200 பேர் முன்னிலையில், புதிய இளையரணிப் பயிற்சிக் கழகத்தையும் ஒரு வழிகாட்டித் திட்டத்தையும் மசெக இளையரணித் தலைவர்கள் அறிவித்தனர்.
இளையரணிப் பயிற்சிக் கழகம் குறித்த அறிவிப்பை இளையரணித் துணைத் தலைவரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சையது ஹருன் அல்ஹப்சி வெளியிட்டார்.

