புதிய துறைகளில் துணிச்சலான முயற்சிகளைத் தொடர வலியுறுத்தல்

பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் பரிந்துரை

புதிய துறைகளில் துணிச்சலான முயற்சிகளைத் தொடர வலியுறுத்தல்

2 mins read
cb8225aa-3107-4576-87c8-475e2b8aeda4
மே 13 ஆம் தேதியன்று மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற எதிர்காலப் பொருளியல் மாநாட்டில், எதிர்காலப் பொருளியலை நம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் வழிநடத்துவது குறித்த கலந்துரையாடலைத் தொடங்கி வைத்துப் பேசிய போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வளர்ச்சியை உறுதிசெய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், போட்டித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ளவும் சிங்கப்பூர் துணிச்சலான, தொலைநோக்குப் பார்வை கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் (Economic Strategy Review (ESR) Committees) பரிந்துரைத்துள்ளன.

புதிய, வளர்ந்துவரும் துறைகளில், துணிச்சலான, தொலைநோக்குப் பார்வை கொண்ட முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் சிங்கப்பூர் தனது எதிர்காலப் பொருளியல் விரிவாக்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அப்பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லா முதலீடுகளும் வெற்றி பெறாவிட்டாலும், விடாமுயற்சியுடன் செயல்படவேண்டுமென்று கூறியதுடன், காலப்போக்கில் தவறவிட்ட வாய்ப்புகளின் மதிப்பு கூடுதலாக இருக்குமென்றும் குழுக்கள் எச்சரித்துள்ளன.

மறுஆய்வுக் குழுக்கள் முன்வைத்த எட்டுப் பரிந்துரைகளில் இது முதலாவது.

இதற்கு, முன்னணித் தொழில்துறைகளை ஈர்த்து, நிலைநிறுத்துவதற்கான திறனை மெருகேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள செயல்பாடுகளின் மாற்றத்தை விரைவுபடுத்தவும், முதலீடுகளை நிலைநிறுத்தவும், புதிய வளர்ச்சி உந்துசக்திகளை உருவாக்க, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும் வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்தது.

“விநியோகச் சங்கிலியின் ஓர் அங்கமாக இருப்பதன்று நோக்கம். விநியோகச் சங்கிலியிலிருந்து அகற்ற முடியாத அங்கமாக இருப்பதே நம் நோக்கம்,” என்று போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறினார்.

புதிய நிறுவனங்கள் தொடர்ந்து உருவாவது பொருளியலுக்கு வலுச்சேர்க்கிறது என்ற அவர், மூலதனம், திறமை, வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது பணி என்றும் சொன்னார்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு அப்பால், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தொடர்ந்து மேம்படுவதும் அவசியம் என்று மறுஆய்வுக் குழுக்கள் கூறின.

மின்னிலக்கம், தரவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் உற்பத்தித்திறனையும், தரத்தையும் மேம்படுத்த நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது, உலக அளவில் உள்ள நிறுவனங்கள் போட்டித்தன்மையுடன் நிலைத்திருக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்பதையும் பரிந்துரைகள் கோடிட்டுக் காட்டின.

ஏற்கனவே செயல்படும் பகுதிமின்கடத்தித் துறையின் மேம்பாடு காண உதவும் குவாண்டம் தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி, விண்வெளித் தொழில்நுட்பங்களைச் சில நம்பிக்கைக்குரிய துறைகளாக அக்குழுக்கள் சுட்டின.

உலகளாவிய அமைப்புகள் சிக்கலாகவும், அபாயங்களுக்கு உட்பட்டனவாகவும் மாறும் நிலையில், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஆளுமை, தணிக்கைகள், இடர் மேலாண்மை உள்ளிட்ட சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும். இந்தச் சேவைகள் தொழில்துறை அடித்தளத்திற்குத் துணைபுரிவதுடன், உலகளாவிய வர்த்தகத்திற்கான நம்பகமான தளமாகச் சிங்கப்பூரின் பங்கையும் வலுப்படுத்தும் என்று பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்