மாறிவரும் தொழில்நுட்ப, உலக அரசியல் சூழலில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் கைகொடுக்கும் வரவுசெலவுத் திட்டப் பரிந்துரைகளை ‘கேபிஎம்ஜி’ கணக்குத் தணிக்கை நிறுவனமும் சிங்கப்பூர் இயக்குநர் கழகமும் முன்மொழிந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவுக்கான நிதியத்தை வர்த்தகத் தலைவர்களுக்கு உருவாக்குவது, முதன்மைப் பயிற்றுநர்களுக்கெனத் தனி வேலை அனுமதி உள்ளிட்டவை அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.
பரிந்துரைகள் அடங்கிய ‘புதிய உலகச் சூழலில் தழைப்பது’ (Prospering in a New Global Landscape) எனும் பெயரிடப்பட்ட அறிக்கையை, அவ்விரு அமைப்புகளும் கேபிஎம்ஜி சிங்கப்பூர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜனவரி 7) வெளியிட்டன.
மீள்திறன்மிக்க பொருளியல் இணைப்புகளை அமைப்பது, மின்னிலக்க உண்மைத்தன்மையை நிலைநாட்டுவது, பல துறைகளை அறிந்துள்ள தலைவர்களையும் உலகத்தர திறனாளர்களையும் உருவாக்குவது ஆகியவை முக்கியப் பரிந்துரைகளாகும்.
இவற்றின்வழி சிங்கப்பூர், தனது வர்த்தகங்களையும் பொருளியலையும் பாதுகாக்க முடியும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் பிப்ரவரி 12ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
புத்தாக்கமிக்க காலகட்டத்திற்கான அறிவுசார் தீர்வுகளைத் திரட்டுவது, நாளைய தலைவர்களுக்கு இன்றே ஆற்றலளிப்பது, வளர்ச்சிக்கான முக்கிய உத்தியான மீள்திறனை வளர்ப்பது ஆகிய மூன்று பிரிவுகளில் அவ்வறிக்கை, பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளது.
அப்பரிந்துரைகளை அண்மையில் இவ்விரு அமைப்புகளும் நடத்திய கருத்தாய்வுவழி திரட்டப்பட்ட தரவுகள் ஆதரிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
வருங்காலத் திறனாளர்களின் உருவாக்கம்
உலக வர்த்தக மையமாகச் சிங்கப்பூர் திகழ்வதற்கு நாட்டின் வர்த்தகங்கள், சிக்கலான நிர்வாகச் சட்டங்களையும் வர்த்தக வரிகள், விதிமுறைகள் ஆகியவற்றையும் சமாளித்துச் செயல்படவேண்டும் என்று நிறுவனத் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“பல்வேறு சூழல்களுக்குத் தகவமைத்துக்கொள்பவர்களாகவும் உருமாற்றங்களை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் தலைவர்கள் திகழவேண்டும். அத்துடன், மாறிவரும் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் தலைவர்கள் விளங்கவேண்டும்,” என்று கேபிஎம்ஜி நிறுவனத்தின் வரிப்பிரிவின் தலைவரும் நிறுவனப் பங்காளியுமான அஜய் குமார் சங்கநேரியா தெரிவித்தார்.
தளவாட நிர்வாகம், செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், நீடித்த நிலைத்தன்மை ஆகிய திறன்களைக் கொண்டவர்கள் தேவை என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
முதன்மைப் பயிற்றுநர்களுக்கான வேலை அனுமதி பற்றிய தங்களது முன்மொழிவை விவரித்த நிறுவனப் பிரதிநிதிகள், கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டையும் தலைமைத்துவத் திட்டங்களின் மேம்பாட்டையும் வழிநடத்த அந்நிபுணர்களுக்கு, முன்மொழியப்படும் வேலை அனுமதி ஊக்கம் அளிக்கும் எனக் கூறினர்.
புதிதாக உருவாகும் வேலைகளை நிரப்புவதற்கு இப்போதே ஊழியர்களைத் தயார்செய்யும் முறையைக் கட்டமைக்கவும் இந்த ஏற்பாடு உதவும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
திறன் மேம்பாட்டை விரைவுபடுத்தவும் சிறந்த உலகத்தர நடைமுறைகளை அறிமுகம் செய்யவும் இந்த வேலை அனுமதி உதவும் என்றும் கூறப்படுகிறது.
“தொடர்ந்து போட்டித்தன்மையுடன் திகழ, அடிப்படைக் கூறுகளைத் தாண்டி தலைவர்கள் செயல்படவேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் பயன்படுத்தி உலகத் தலைவர்கள் வர்த்தக இலக்குகளை எட்டவேண்டும். திட்டமிட்டு, துணிச்சலான முடிவுகளை எடுத்து, புதிய வாய்ப்புகளையும் தேடித் திரட்டவேண்டும்,” என்று கேபிஎம்ஜி நிர்வாகத் தலைவர் லீ ஸு யெங் வலியுறுத்தினார்.

