திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) முதல், அதிகரிக்கப்பட்ட தண்டனைகள் அமலுக்கு வருவதால், குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் குற்றவாளிகளை நீதிமன்றங்கள் இன்னும் கடுமையாகக் கையாள முடியும்.
குற்றவியல் சட்டம் (பல்வேறு திருத்தங்கள்) பற்றிய சட்டம் 2025, கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்தங்களின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறார்களைச் சித்திரிக்கும் ஆபாசப் பொருள்களுக்கு தற்போது பொருந்தக்கூடிய கடுமையான தண்டனைகள், 18 வயதுக்குட்பட்ட சிறார்களையும் உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்படும்.
18 வயதுக்குட்பட்ட சிறாரைச் சித்திரிக்கும் ஆபாசப் பொருள்களை 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு மின்னணு முறையில் பரப்புவதற்கும் இந்த மேம்படுத்தப்பட்ட தண்டனைகள் பொருந்தும்.
இத்தகைய பெரிய அளவிலான மின்னணுப் பரவலை எளிதாக்கும் நோக்கத்துடன், வாட்ஸ்அப், டெலிகிராம் குழு உரையாடல்கள் மற்றும் ஒளிவழிகள் போன்ற இணையத் தளங்களை அமைப்பவர்கள் அல்லது நிர்வகிப்பவர்களும் மேம்படுத்தப்பட்ட தண்டனைகளை எதிர்நோக்குவார்கள்.
வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 14) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், உள்துறை அமைச்சு இந்தத் திருத்தங்கள், அத்தகைய பொருள்களை மிக விரைவாகவும், குறைந்த செலவில் பெரிய குழுக்களுக்கும் அனுப்ப உதவும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் எளிதாக்கப்படும் பெரிய அளவிலான மின்னணுப் பரவலைக் கையாள்கின்றன என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, பாலியல் ரீதியாகத் தூண்டுதல் விவகாரத்தில் தற்போது குற்றவாளியும் பாதிக்கப்பட்டவரும் பாலியல் செயலைச் செய்வதற்காக வெளிநாட்டில் சந்தித்தால் அல்லது சந்திக்க எண்ணினால் குற்றமாகக் கருதப்படாத நிலையில், இரு தரப்பினரில் எவரேனும் ஒருவரின் பயணம் சிங்கப்பூரில் தொடங்கியிருந்தால், அது இனி ஒரு குற்றமாகக் கருதப்படும்.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வன்போலிகள்
அந்தரங்கப் படங்கள் மற்றும் குழந்தையைத் தவறாகக் காட்டும் பொருள்கள் மீதான செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கத்தையும் இந்த மாற்றங்கள் உள்ளடக்கியுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் அதிகரித்து வரும் நுட்பத்தினால், முற்றிலும் செயற்கையான படங்களை உருவாக்க முடியும். ஏற்கெனவே உள்ள படங்கள் அல்லது பதிவுகளை மாற்றி உருவாக்கப்படும் படங்களை விட இவை குறைவான ஆட்சேபனைக்குரியவை அல்ல,” என்று கூறியிருந்தது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல், அசல் படம் அல்லது பதிவை மாற்றாமல் ஒரு நபரை சித்திரிப்பதற்காக உருவாக்கப்படும் உள்ளடக்கங்களும் அந்தரங்கப் படங்களின் வரையறையில் சேர்க்கப்படும்.


