ஆகஸ்ட் மாதச் சில்லறை விற்பனை 0.7% கூடியது

ஆகஸ்ட் மாதச் சில்லறை விற்பனை 0.7% கூடியது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Oct 2026 - 5:49 pm

2 mins read

சிங்கப்பூரின் சில்லறை விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம், ஆண்டு அடிப்படையில் 0.7 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் பதிவான 1.3 விழுக்காட்டு வளர்ச்சியைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி பதிவானதாகச் சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை திங்கட்கிழமை (அக்டோபர் 5) தெரிவித்தது.

மோட்டார் வாகனங்கள் தவிர்த்த சில்லறை விற்பனை 1.6 விழுக்காடு உயர்ந்தது. இருப்பினும், பருவகாலச் சீரமைப்பின்படி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த விற்பனை 1 விழுக்காடு சரிந்தது. வாகனங்கள் தவிர்த்த விற்பனை 0.6 விழுக்காடு கூடியது.

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாத மொத்தச் சில்லறை விற்பனை மதிப்பு $4.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டது. இதில் இணையவழிப் பரிவர்த்தனை 15.7 விழுக்காடு பங்களித்தது.

சில்லறை வர்த்தகப் பிரிவில் பெரும்பாலான துறைகள் வளர்ச்சியைப் பதிவுசெய்தன. அழகுசாதனப் பொருள்கள், குளியலறைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் ஆகிய துறைகளில் ஆக அதிகமாக 11.2 விழுக்காட்டு வளர்ச்சி பதிவானது. கணினி, தொலைத்தொடர்புச் சாதனத் துறை 10.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

பொழுதுபோக்குச் சாதனங்கள், பெட்ரோல் நிலையங்கள் முறையே 4.3 விழுக்காடு, 3.2 விழுக்காடு வளர்ச்சி கண்டன. மாறாக, மோட்டார் வாகன விற்பனை 4.6 விழுக்காடு சரிந்தது. கடிகாரங்கள், நகைகள் விற்பனை 2.7 விழுக்காடு குறைந்தது.

இதனிடையே, உணவு, பானச் சேவைகளின் விற்பனை 1.6 விழுக்காடு குறைந்து $1.7 பில்லியனாகப் பதிவானது. இதில் இணையவழிப் பங்களிப்பு 20.6 விழுக்காடு ஆகும். உணவகங்களின் விற்பனை 2.1 விழுக்காடு சரிந்தது. சிற்றுண்டிச்சாலைகளின் விற்பனை 5.3 விழுக்காடு வீழ்ச்சிகண்டது. உணவங்காடிகளின் விற்பனை 4.8 விழுக்காடு குறைந்தது. இருப்பினும், விரைவு உணவகங்களின் விற்பனை 7.8 விழுக்காடு கூடியது. உணவு விநியோகச் சேவை நிறுவனங்களின் விற்பனை 2.9 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்