ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் இருந்து சிங்கப்பூருக்கு சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய கேன்பரா ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மின்சார ஏற்றுமதித் திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 17.6 பில்லியன் வெள்ளி எனக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சூரியத் தகடுகளில் பதிவாகும் சூரிய சக்தி மின்சாரமாக மாற்றப்பட்டு கடலுக்கு அடியில் உள்ள கம்பி வடங்கள் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பப்படும். கடலுக்கு அடியில் உள்ள கம்பிவடங்களின் நீளம் சுமார் 4,300 கிலோ மீட்டர் இருக்கும்.
இந்தத் திட்டத்தை சன் கேபிள் நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் ‘ஆஸ்திரேலியா- ஏஷியா பவர் லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க மின் சக்திகளைப் பயன்படுத்தும் போக்கு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்துவருவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்தது.
இறுதி முதலீடு குறித்து 2027ல் முடிவெடுக்கப்படலாம் என்றும் மின்சார ஏற்றுமதி 2030க்கு மேல் தொடங்கும் என்றும் சன் கேபிள் கூறுகிறது.

