ஆஸ்திரேலியா: சில வகையான வீடுகள் வாங்க வெளிநாட்டினருக்கு தடை

2 mins read
0fc5a3ee-8926-465f-89c7-03c5e55990de
உலகிலேயே வீட்டு விலை அதிகமாக  உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இது அடுத்த தேர்தலில் முக்கிய பிரச்சினையாக விளங்கும். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக, அந்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆறு மாதங்களுக்கு மேல் ஒருவர் உரிமையாளராக உள்ள வீட்டை அல்லது ஏற்கெனவே வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதில் வேகமாக அதிகரித்து வரும் வீட்டு விலைகள் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக விளங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால், எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரேலியாவில் ஒருவர் உரிமையாளராக உள்ள வீட்டையோ அல்லது ஏற்கெனவே வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளையோ வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16ஆம் தேதி) தெரிவித்தார் அந்நாட்டு வீட்டு வசதி அமைச்சர் கிளேர் ஓநெய்ல். இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா என்று பரிசீலிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

உலகிலேயே வீட்டு விலை அதிகமாக உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இது அடுத்த தேர்தலில் முக்கிய பிரச்சினையாக விளங்குவதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவினம் நெருக்கடி நிலையை எட்டியுள்ள நிலையில், அதில் ஒரு அங்கமாக விளங்கும் வீட்டு விலையும் பிரச்சினையாக உருவாகும் என்று தெரிகிறது. இது, வாழ்நாளில் தங்களால் வீடு வாங்க முடியாமல் போய்விடுமோ என அஞ்சும் இளையர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தத் தடை வீட்டு விலையை ஓரளவு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்