மாணவர், குறுகிய கால வேலை விசாக்களுக்கு ஆஸ்திரேலியா புதிய கட்டுப்பாடு

குடியேற்றக் கட்டுப்பாடு: ஆசியான் மாணவர்களுக்கு விலக்கு அளித்தது

மாணவர், குறுகிய கால வேலை விசாக்களுக்கு ஆஸ்திரேலியா புதிய கட்டுப்பாடு

படம்: ராய்ட்டர்ஸ்

18 Sep 2026 - 3:35 pm

3 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா, விடுமுறையில் குறுகிய கால வேலை விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டுத் தொழிலாளர் கட்சி அரசு வியாழக்கிழமை (செப்டம்பர் 17) அறிவித்தது.

அனைத்துலக மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர முடியாது. எனினும், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியான், பசிபிக் வட்டார நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கால விடுமுறை விசா திட்டத்தின் கீழ் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகள் தங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டு,குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும்.

அதேவேளையில் கட்டுமானம், விவசாயம், மீன்வளம், சுரங்கம், கற்பித்தல் ஆகிய திறன் பற்றாக்குறை நிலவும் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

புதிய விதிகளின்படி, அனைத்துலக மாணவர்கள் நாட்டிலேயே தொடர்ந்து தங்குவதற்காகப் படிப்புகளை அடிக்கடி மாற்றும் ‘விசா ஹாப்பிங்’ முறையும் தடுக்கப்படும். உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே படிப்பு மாற்ற அனுமதி வழங்கப்படும். 2026ன் முதல் பாதியில் வழங்கப்பட்ட 337,427 மாணவர் விசாக்களில் 45,991 விசாக்கள் மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டவை.

நாட்டில் நிலவும் வீட்டு வசதி தட்டுப்பாடு, சமூக சேவை அழுத்தங்கள் காரணமாக குடியேற்றத்தைக் குறைக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டிற்கு 300,000 ஆக உள்ள குடியேறிகளின் எண்ணிக்கையை 2026-27 நிதியாண்டில் 245,000 ஆகவும், அடுத்த ஆண்டில் 225,000 ஆகவும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

எனினும், செப்டம்பர் 14ஆம் தேதி ‘ஒன் நேஷன்’ கட்சி அறிவித்த திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது எண்ணிக்கை குறைவு. ‘ஒன் நேஷன்’ கட்சி, ஓராண்டில் குடியேறிகளின் எண்ணிக்கையை 130,000 ஆகக் குறைக்கவும், அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்துலக மாணவர்கள், திறனாளர் குடியேறிகளின் குடும்பத்தினர் போன்ற தற்காலிக விசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை 750,000 ஆகக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது ஏறக்குறைய மூன்று மில்லியன் தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் உள்ளனர்.

பொருளியலைப் பாதிக்கும்: உள்துறை அமைச்சர்

பொலின் ஹேன்சனின் ‘ஒன் நேஷன்’ கட்சி முன்வைத்த திட்டங்களை நிராகரித்துள்ள உள்துறை அமைச்சர் டோனி பார்க், அத்தகைய நடவடிக்கை நாட்டின் பொருளியலைப் பாதிக்கும் என்று கூறினார்.

ஆஸ்திரேலிய அனைத்துலகக் கல்வி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பில் ஹனிவுட், அனைத்துலக மாணவர் பிரதிநிதிகள் மன்றத் தலைவர் லியாங் வைஹாங் ஆகியோர், இதர நாட்டு மாணவர்களுக்கு இத்தடை ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் தரும் எனக் குறிப்பிட்டனர்.

தீவிர குடியேற்றக் குறைப்பு பொருளியல் மந்தநிலைக்கும் மனிதவள குறைபாட்டிற்கும் வழிவகுக்கும் என ஆஸ்திரேலிய தொழில்துறை கூட்டமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி இன்னெஸ் வில்லாக்ஸ் எச்சரித்துள்ளார்.

விவசாயத் துறைக்கு பெரும் பாதிப்பு

புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகள் வேளாண் துறையில் கடுமையான ஆள்பலக் குறைபாட்டை ஏற்படுத்தி, வரவிருக்கும் கோதுமை அறுவடைகளைப் பாதிக்கக்கூடும் என்று அந்நாட்டு விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.

புதிய விதிகளின்படி, பண்ணைகள், கிராமப்புற வணிகங்களில் பணிபுரியும் ‘பேக்பேக்கர்’ எனப்படும் விடுமுறையில் வேலைசெய்ய குறுகிய கால விசா வைத்திருப்போர் விசாவை நீட்டிக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த விசாக்களின் பரிசீலனைக் காலமும் சில நாட்களிலிருந்து மூன்று மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதி நாடான ஆஸ்திரேலியாவில், விவசாயப் பணிகளில் ஏழில் ஒரு பங்கு வேலையிடங்களை இந்த விசா வைத்திருப்பவர்களே நிரப்புகின்றனர். புதிய விசா வழங்கும் நடைமுறை ஏற்கெனவே தாமதமாகி வருவதால், பல பண்ணைகள் போதிய பணியாளர்கள் இன்றித் தவித்து வருவதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ஹேமிஷ் மெக்கன்டைர் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்