சிட்னி: – மேற்கு ஆஸ்திரேலியாவில் சில தற்காப்பு நிலையங்களை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள வசதிகள் செய்துதரப்படும் என்று ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறியிருக்கிறார்.
ஆக்கஸ் (Aukus ) அணுசக்தி நீர்மூழ்கி உடன்பாட்டின்கீழ் அமெரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு நீர்மூழ்கிக்கப்பல்களை அனுப்பிவைப்பதற்கு உதவவே அத்தகைய ஏற்பாடு.
பெர்த் நகருக்கு அருகே உள்ள ஹெண்டர்சன் கப்பல் பட்டறையின் வசதிகளை மேம்படுத்த $10 பில்லியன் செலவிடப்போவதாக அரசாங்கம் சனிக்கிழமை (செப்டம்பர் 13) தெரிவித்தது. இன்னும் 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை ஆக்கஸ் நீர்மூழ்கிக்கப்பல்களுக்கான பராமரிப்பு நடுவமாக உருமாற்றுவது திட்டம்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய மூன்றும் 2021ஆம் ஆண்டு ஆக்கஸ் உடன்பாட்டைச் செய்துகொண்டன. இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பது நோக்கம். அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி ஆற்றலுடன்கூடிய தாக்கும் வல்லமை பெற்ற நீர்மூழ்கிக்கப்பல்களை வழங்குவதற்கு முத்தரப்பும் திட்டமிட்டிருந்தன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் உடன்பாட்டை இப்போது மறுஆய்வு செய்கிறது.
ஆஸ்திரேலியக் கப்பல் பட்டறைகளில் வசதிகளை மெருகூட்டுவது கப்பல் கட்டுமானத் துறையினருக்கு முக்கியமானது என்று திரு. மார்ல்ஸ் கூறினார்.
“ஆஸ்திரேலியாவுக்குத் தேவையான ஆற்றல்களைப் பெருக்க அரசாங்கம் வரலாறு காணாத அளவுக்குத் தற்காப்புச் செலவினத்தைக் கூட்டும்,” என்றார் அவர்.
ஹெண்டர்சன் கப்பல் பட்டறையை மேம்படுத்த அரசாங்கம் சென்ற ஆண்டு (2024) முதற்கட்டமாக $108 மில்லியனை முதலீடு செய்தது.
அங்குப் புதிதாக விமானம் தாங்கிக் கப்பலொன்றும் பெரிய படகுகளும் கட்டப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்தது. உள்நாட்டினருக்கு அதன் மூலம் ஏறக்குறைய 10,000 வேலைகள் உருவாக்க அவை ஆதரவாக அமையும் என்றும் கூறப்பட்டது.

