சிங்கப்பூர் ஏர்லைன்சின் எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடன ஆசிரியர் கெர்ரி ஜோர்டன் உடல் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்கியூ321 விமானம் நடுவானில் மிகக் கடுமையாக ஆட்டங்கண்டபோது திருவாட்டி ஜோர்டனின் முதுகெலும்பில் கடுமையான காயம் ஏற்பட்டது.
உடல் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 52 வயது ஜோர்டனால் அன்றாட வேலைகள் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக ஆஸ்திரேலிய செய்தித்தாளான ‘த அட்வெர்டைசர்’-இடம் வருத்தம் தெரிவித்தார்.
“கைகளைப் பயன்படுத்த முடியாததால் உணவு சாப்பிடுவது, பற்கள் துலக்குவது, கைப்பேசி பயன்படுத்துவது போன்ற எளிய வேலைகள் செய்ய முடியவில்லை, உடலில் உள்ள பல இடங்களில் உணர்ச்சி இல்லை,” என்று ஜோர்டன் கண்ணீருடன் கவலையைப் பகிர்ந்தார்.
தற்போது ஜோர்டன் ராயல் அடிலெய்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவாட்டி ஜோர்டனுக்கு முதுகின் சி7-டி1 பகுதி எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது, கழுத்தும் முதுகின் மேற்பக்கத்தையும் அது இணைக்கும்.
மேலும் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு, சி1, சி2 முதுகெலும்பில் முறிவு, விலா எலும்பு முறிவு ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
திருவாட்டி ஜோர்டனும் அவரது கணவர் கெய்த் டேவிசும் பிரிட்டனில் விடுமுறையை கொண்டாடிவிட்டு தாயகம் திரும்பும்போது இச்சம்பவம் ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மே மாதம் 21ஆம் தேதி லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம் மியான்மாருக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது தீடீரென ஆட்டங்கண்டது. அதில் பல பயணிகள் காயமடைந்தனர். அதன் பின்னர் விமானம் பேங்காக்கில் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
62 நொடிகள் ஆட்டங்கண்ட விமானத்தில் 211 பயணிகள் 18 சிப்பந்திகள் இருந்தனர். இச்சம்பவத்தில் ஒரு பயணி உயிரிழந்தார்.