ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 36 வயது ஆடவர் ஒருவர், சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் உள்ள சிப்பந்தியிடம் விமானத்தை விபத்துக்குள்ளாக்கப்போவதாகக் கூறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதனால், அவர்மீது டிசம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
நவம்பர் 23ஆம் தேதி அந்த விமானத்தில் ஏறியபோது, விமானச் சிப்பந்தியிடம் அந்த ஆடவர் அவ்வாறு கூறியதாகச் சந்தேகிக்கப்படுவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
அந்த ஆடவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, காத்திருப்பு அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் மீண்டும் விமானத்தை விபத்துக்குள்ளாக்கப்போவதாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
“காவல்துறை அனைத்துப் பாதுகாப்பு மிரட்டல்களையும் கடுமையாக எடுத்துக்கொள்கிறது. பொய்யான மிரட்டல்களால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நபருக்கும் எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்காது,” என்று சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
அச்சத்தை ஏற்படுத்தும் மிரட்டலுக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அந்த ஆடவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு $5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.