தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையத்தில் திருடிய ஆஸ்திரேலிய ஆடவருக்கு 10 நாள் சிறை

2 mins read
8b4b20fb-7e56-410a-aff5-569e3b9c3600
திருட்டுக் குற்றங்களை ஒப்புக்கொண்ட ஆரோன் கேரி ஸ்லாட்டர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் $3,500 மதிப்புள்ள பொருள்களைத் திருடிய ஆஸ்திரேலிய ஆடவருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆரோன் கேரி ஸ்லாட்டர், 45, எனப்படும் அவர், தம் மீது சுமத்தப்பட்ட மூன்று திருட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி மெல்பர்ன் நகரில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் 2வது முனையத்தில் வந்திறங்கிய அந்த ஆடவர் மாலத்தீவு செல்வதற்காகக் காத்திருந்தார்.

இரவு 7.30 மணியளவில் விமான நிலையத்திற்குள் இருந்த பல்வேறு கடைகளுக்குச் சென்றார். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பொருளை அவர் திருடினார்.

லக்கேஜ் பெட்டி, பைஜாமா உடை, உயர்தர கறுப்புக் கண்ணாடிகள், உயர்தர கைப்பை ஆகியன உட்பட பல்வேறு பொருள்களைக் கடைகளில் இருந்து எடுத்த பின்னர் அவற்றுக்குப் பணம் செலுத்தாமல் வெளியேறிச் சென்றார்.

ரே-பான் கறுப்புக் கண்ணாடிக் கடையில் இருந்த விற்பனை உதவியாளர் தமது கடையில் திருட்டு போனது குறித்து புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு படக்கருவியின் உதவியுடன் அவரை விமான நிலையப் பாதுகாவல் அதிகாரிகள் தேடினர்.

பயண மாறுதலுக்கான புறப்பாட்டு வாயில் அருகே ஆடவரைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக அவரைச் சோதனையிட்டனர். திருட்டு போன பொருள்கள் அவரிடம் இருந்ததைக் கண்டனர்.

விசாரணையில், இதற்கு முன்னர் ஜூலை 28ஆம் தேதி அந்த ஆடவர் சாங்கி விமான நிலையத்தில் $600 மதிப்புள்ள பையைத் திருடியதும் கடை ஊழியர் அதனைக் கண்டுபிடித்து பையைத் திரும்பப் பெற்றதும் தெரியவந்தது.

அந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்யப்படாததால் அப்போது அவர் தப்பிவிட்டார்.

திருட்டில் ஈடுபட்டபோது குடும்ப ஆதரவும் வேலையும் இல்லாததால் அந்த ஆடவர் தவித்ததாகவும் மூன்று நாள் சிறைத் தண்டனை விதிக்குமாறும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் வேண்டினார். இருப்பினும், 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்