புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள கிரீன்லீஃப் பிளேஸ் அருகே அடர்ந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) இரவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆடவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) தெரிவித்தது. சந்தேகம் தரும் வகையில் நடந்துகொண்ட அந்த ஆடவர்கள் வனப் பகுதிக்குள் ஓடிச் சென்றதையடுத்து அவர்களைத் தேடும் வேட்டை இடம்பெற்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 36லிருந்து 41 வயதுக்கு உட்பட்டவர்கள். காவல்துறை விசாரணை தொடர்கிறது.
கூர்க்கா சேவையாளர்கள், காவல்துறையின் துப்பறியும் நாய்ப் பிரிவு பணியாளர்கள், சாதாரண உடையணிந்த காவல்துறையினர் போன்றோர் அந்த அதிகாரிகள் தேடல் மேற்கொண்ட குழுவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிரீன்லீஃப் பிளேஸ் வட்டாரம் தனியார் குடியிருப்புப் பகுதிகளின் தரை வீடுகளை உள்ளடக்கிய அமைதி சூழ்ந்த பகுதியாகும்.
ஏறத்தாழ ஆறு காவல்துறை வாகனங்களை தாம் வசிக்கும் பகுதியின் அருகே கண்டதாக சிக்ஸ்த் அவென்யூ குடியிருப்பாளரான பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 8 மணி வரை அதிகாரிகள் அந்தப் பகுதியில் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், காலை நேரத்தில் பல்வேறு காவல்துறை லாரிகளைக் கண்டதாகவும் கூறினார்.
முற்பகல் 11.30 மணியளவில் அந்தப் பெண்ணை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் தொடர்புகொண்டபோது அதிகாரிகளும் வாகனங்களும் அந்தப் பகுதியில் இல்லை என்றார்.
காவல்துறையினரின் நடமாட்டம் தமது குடியிருப்பு வட்டாரத்தில் மிகவும் அரிது என்று குறிப்பிட்ட அவர், எச்சரிக்கை ஒலி எதுவும் கேட்கவில்லை என்றார். எந்தவொரு குடியிருப்பாளரிடமும் காவல்துறையினர் பேசியதாகத் தெரியவில்லை என்றும் அப்பெண் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளிக்கிழமை இரவு 10.50 மணியளவில் அந்த வட்டாரத்தில் ‘டிரோன்’ ஒன்று பறப்பதை செய்தியாளர் கண்டார். சிறிய சாலைகளின் சந்திப்புகளில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்ததையும் அவர் கவனித்தார்.
வனப் பகுதியைச் சூழ்ந்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கை பற்றி தகவல் அறிய காவல்துறையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாடியுள்ளது.

