$800,000க்குமேல் வரி செலுத்தாத சிகரெட்டுகள் பறிமுதல்; மூவர் கைது

1 mins read
3b573aea-691f-4e15-abc1-ca3710685213
வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை கிட்டத்தட்ட $812,788 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இரண்டு அமலாக்க நடவடிக்கைகளில் மொத்தம் 7,500 பெட்டிகளில் இருந்த கள்ளச் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்பில் ஆடவர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரிகளைச் செலுத்தாமல் ஏய்த்த தொகை கிட்டத்தட்ட $812,788 என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஜூலை 2ஆம் தேதி சுங்கத்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட மூவரும் சிங்கப்பூரர்கள் என்றும் அவர்களின் வயது முறையே 26, 27, 43 என்றும் அது கூறியது.

டெப்போ லேனில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் அவர்கள் பிடிபட்டனர்.

அந்த வட்டாரத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் காணப்பட்ட இருவரை அதிகாரிகள் சோதித்ததில் சாவி ஒன்றைக் கைப்பற்றினர். அந்தச் சாவியைப் பயன்படுத்திக் கட்டடம் ஒன்றைத் திறந்தபோது அங்கு 3,750 பெட்டிகளில் இருந்த கள்ளச் சிகரெட்டுகளையும் மூன்றாவது ஆடவரையும் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கள்ளச் சிகரெட்டுகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை மீண்டும் பொட்டலமிட்டு, விநியோகிப்பதாகக் கூறப்பட்டது.

அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஜூன் 27ஆம் தேதி பாண்டான் அவென்யூவில் உள்ள கிடங்கு ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் மேலும் 3,750 பெட்டிகளில் இருந்த கள்ளச் சிகரெட்டுகளைக் கைப்பற்றினர்.

கள்ளச் சிகரெட்டுகளை வாங்குதல், விற்றல், விநியோகித்தல், சேமித்தல், வைத்திருத்தல் போன்றவை கடுமையான குற்றங்கள் என்பதை சுங்கத்துறை நினைவுறுத்தியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையைப்போல் 40 மடங்கு வரையிலான அபராதமோ ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்