சிங்கப்பூர் சாலைகளில் தானியக்க வாகனங்களை அறிமுகப்படுத்தும் போக்குவரத்து அமைச்சின் முக்கிய முடிவாக, பொங்கோல் வட்டாரத்தில் தானியக்கப் பேருந்துகள் 2025ன் நாலாம் காலாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும்.
தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், ஜூன் 27ல் சீனாவின் குவாங்ஸோ நகருக்கு பணி நிமித்தமாகச் சென்றபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சில வாரங்களுக்கு முன்பு திரு சியாவ், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தானியக்க வாகனங்களைக் கூடுதலாக அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை அறிமுகம் செய்ததை அடுத்து இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேம்பட்ட வசதி
பொங்கோல் வட்டாரவாசிகள் அளித்த கருத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக சில பயணப் பாதைகள் கருத்தில்கொள்ளப்பட்டு வருவதாக குவாங்ஸோவில் திரு சியாவுடன் சென்றுள்ள போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.
பொங்கோல் வெஸ்ட்டில் உள்ள வட்டாரவாசிகளில் சிலர், பொங்கோல் ஈஸ்ட்டிலுள்ள ஈரச்சந்தை, பலதுறை மருந்தகம் போன்ற வசதிகளை மேலும் எளிதாகச் சென்றடைய விரும்புவதாக பொங்கோல் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திருவாட்டி சுன் தெரிவித்தார்.
அதே போல, பொங்கோல் ஈஸ்ட்டில் வசிப்பவர்கள், பேருந்து முனையம் போன்ற போக்குவரத்து மையங்களுக்கு மேலும் வசதியாகச் செல்ல விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.
பேருந்து வகை பற்றிய உறுதியான விவரங்கள், அவற்றின் பயணப் பாதைகள், ஒவ்வொரு பயணத்திற்குமான கட்டணங்கள் போன்ற விவரங்கள் இறுதிசெய்யப்பட்டு வருகின்றன.
உத்தேச நடத்துநர்கள், தானியக்க வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் போக்குவரத்து அமைச்சு பேசு்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் திரு சியாவ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள் (அவற்றில் சில, சீனாவைச் சேர்ந்த பங்காளிகளைக் கொண்டவை), அமெரிக்காவின் தானியக்க டாக்சி நிறுவனம் வேமோ ஆகியோரை திரு சியாவும் அவரது அமைச்சினரும் சந்திக்கக்கூடும்.
“நாங்கள் இப்படிச் செய்வதால் எங்களுக்கு ஏராளமான தெரிவுகள் உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட சேவை வழங்குநர்கள் இத்திட்டத்தில் ஈடுபடுவதற்கான வழி இருக்கும் என நினைக்கிறேன்,” என்று திரு சியாவ் கூறினார்.
பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
தானியக்க வாகனங்கள் ஒவ்வொன்றிலும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இருப்பார் என்றும் அவரை பளிச்சென்ற வண்ண நிறம் ஒன்றால் எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புக்கு முக்கியம் தரப்படும் என்று திரு சியாவும் திருவாட்டி சுன்னும் வலியுறுத்தினர்.
வாகன வேகம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அதிவிரைவாகச் செல்லாது என்றும் திரு சியாவ் கூறினார். அறிமுக நடவடிக்கையின் மூன்றாவது கட்டத்தில் தானியக்க வாகனங்களிலிருந்து பாதுகாப்பு அதிகாரி அகற்றப்படலாம்.
மற்ற குடியிருப்பு வட்டாரங்களைக் காட்டிலும் பொங்கோல் சற்று புதிது என்றாலும் அதன் சாலைக் கட்டமைப்பும் அங்குள்ள மக்களின் பயணப்போக்குகளும் முதிர்ச்சி பெற்றுள்ளதாக திரு சியாவ் கூறினார்.
திட்டம் வெற்றி பெற்றால் 2026ன் தொடக்கத்தில் இத்தகைய வாகனங்களை மற்ற இடங்களிலும் அறிமுகம் செய்வது குறித்து அதிகாரிகள் திட்டமிடுவர். பொங்கோலுக்கு அடுத்து தெங்கா வட்டாரம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும்.