சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் தானியக்க இயந்திரங்களைப் பயன்படுத்தும் புதிய முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தின் புலிம் தானியக்கச் சோதனைப் பகுதியில் ஜேடிசி கார்ப்பரேஷனும் காஜிமா நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தைச் சோதித்து வருகின்றன.
இயக்கக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் இந்த நில அகழ்வு, (எக்ஸ்கவேட்டர்) மண் இறுக்கி (காம்பேக்டர்) இயந்திரங்கள், நிர்ணயிக்கப்பட்ட பணிகளைத் தாமாகவே மேற்கொள்கின்றன. இச்சோதனை முயற்சி வெற்றிபெற்றால் எதிர்காலக் கட்டுமானத் திட்டங்களில் இத்தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படும் என்று ஜேடிசி தெரிவித்தது.
இரு எக்ஸ்கவேட்டர்கள், இரு காம்பேக்டர்களுடன் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட முதற்கட்டச் சோதனை, 2027 தொடக்கம்வரை நடைபெறும். தொடர்ந்து, தானியக்கப் நிரவி இயந்திரம் (புல்டோசர்கள்), சரக்கு உந்துகளை உள்ளடக்கிய இரண்டாம் கட்டச் சோதனை தொடங்கும்.
சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால் 2028ஆம் ஆண்டிற்குள் ஜேடிசியின் கட்டுமானக் களங்களில் இந்த இயந்திரங்கள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 800 ஹெக்டர் பரப்பளவிலான மண் அள்ளும் திட்டங்களை ஜேடிசி மேற்கொள்ளவுள்ள நிலையில், நாட்டின் கட்டுமானத்துறை ஏறக்குறைய 15 விழுக்காடு ஆட்குறைபாட்டை எதிர்கொண்டு வருகிறது.
கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்துவது நீண்டகால தீர்வாகாது என்பதால், கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒருவரே இரு இயந்திரங்களைக் கண்காணிக்கும் வகையில் மனிதவளத் தேவையைக் பாதியாகக் குறைக்க ஜேடிசி திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் கட்டுமான வேகம் 20 முதல் 30 விழுக்காடுவரை அதிகரிக்கும். ஆபத்தான பணிச்சூழலில் ஊழியர்கள் நேரடியாக ஈடுபடுவது குறைக்கப்படுவதால், பணியடப் பாதுகாப்பும் மேம்படும்.
இந்தத் தொழில்நுட்பத்திற்காக உள்ளூர் ஒப்பந்த நிறுவனமான ‘கொக் டோங் கன்ஸ்ட்ரக்ஷன்’ ஊழியர்கள் ஜப்பானுக்குச் சென்று பயிற்சி பெற்றுவந்துள்ளனர்.
கட்டுமானத் துறையில் 90 விழுக்காடுவரை உள்ள வெளிநாட்டு ஊழியர்கள், இத்தகைய ரோபோடிக்ஸ் பயிற்சிகள் மூலம் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மேலும், புதிய இயந்திரங்களை வாங்குவதற்குப் பதிலாக, தற்போதுள்ள சாதாரண இயந்திரங்களிலேயே தகுந்த தொழில்நுட்பங்களைப் பொருத்தி தானியக்க இயந்திரங்களாக மாற்ற முடியும்.
மனிதவள அமைச்சுடன் இணைந்து இந்த இயந்திரங்களுக்கான பாதுகாப்பான செயல்பாட்டு வழிகாட்டுதல்களையும் ஜேடிசி உருவாக்கி வருகிறது.
