சாங்கி விமான நிலையத்தில் தானியங்கி வாகனங்களைப் பயன்படுத்துவதுடன் செயற்கை நுண்ணறிவு அம்சங்களையும் சேர்க்க சேட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்லவும் பயணப் பெட்டிகளைப் பயணிகள் முனையங்களிலிருந்து விமானங்களுக்குக் கொண்டு செல்லவும் தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி வாகனங்களையும் அவற்றை இயக்குபவர்களையும் மிகச் சிறந்த, துரிதமான முறையில் பயன்படுத்த செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் தளம் ஒன்று பயன்படுத்தப்படும்.
சேட்ஸ் நிறுவனம் தனது ‘ஹப் ஹேண்ட்லர் ஆஃப் த ஃபியூச்சர்’ திட்டத்தின்கீழ் இத்திட்டங்களை புதன்கிழமை (அக்டோபர் 29) முன்வைத்தது.
இத்திட்டத்துக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை சேட்ஸ் சிங்கப்பூர் நடுவத்தின் தலைமை நிர்வாகி திரு ஹென்ரி லோ தெரிவிக்கவில்லை.
விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கையும் சரக்குகளைக் கையாளும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட திரு லோ, அவற்றைச் சமாளிக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உலகளாவிய விமானச் சரக்குகளின் அளவு, 2025ஆம் ஆண்டில் 69 மில்லியன் டன்னை எட்டும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் எதிர்பார்க்கிறது.
இது 2024ஆம் ஆண்டைவிட சற்று அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
“விமான நிலையங்களை மிகச் சிறந்த, புத்தாக்கமிக்க முறையில் இயக்க இடைவிடா முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிகள் அதிகரிக்கும். சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துச் சூழலை எதிர்காலத்துக்கு ஏற்புடையதாக மேம்படுத்துவோம்.
“அதிநவீனத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலமாகவும் திறன்களை மேம்படுத்துவதன் வழியாகவும் எதிர்காலத்துக்குத் தேவையான மீள்திறன்மிக்க, துடிப்புமிக்க, நீடித்து நிலைத்திருக்கும் விமான நிலையங்களை உருவாக்கலாம்,” என்று திரு லோ தெரிவித்தார்.
தனது தளச் செயல்பாடுகள், சரக்குகளைக் கையாளும் நடவடிக்கை ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த $250 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை முதலீடு செய்யப்படும் என்று கடந்த மே மாதத்தில் சேட்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

