சாங்கி விமான நிலையத்தின் வெவ்வேறு முனையங்கள் வழியாகப் பயணம் செய்வோருக்குக் கைகொடுக்கவிருக்கிறது புதிய தானியக்க சக்கர நாற்காலிகள்.
நீண்டதூரம் நடக்க இயலாதோரும் படிகள் ஏறமுடியாதோரும் அந்தத் தானியக்க சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அத்தகையோர் யாருடைய உதவியுமின்றி தானியக்க சக்கர நாற்காலிகள் மூலம் ஒரு முனையத்திலிருந்து மற்றொரு முனையத்திற்குச் செல்ல முடியும்.
இரண்டாம், மூன்றாம் முனையங்கள் வழி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா ஆகிய விமானங்களில் பயணம் செய்வோர் தானியக்க சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தலாம்.
தானியக்க சக்கர நாற்காலிகளுக்கான சோதனைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம்வரை நடைபெற்றன.
தானியக்க சக்கர நாற்காலிகளுக்கான தேவை கடந்த ஆண்டு 20 விழுக்காடு அதிகரித்ததாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் சொன்னது.
முதற்கட்டமாக, 18 தானியக்க சக்கர நாற்காலிகள் இரண்டாம், மூன்றாம் முனையங்களில் வைக்கப்படும். இரண்டாம் முனையத்தில் ஒன்பதும் மூன்றாம் முனையத்தில் ஒன்பதும் வைக்கப்படும்.
ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்துக்கு மாறும்போது ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாகக் காத்திருக்கும் பயணிகளுக்கு அந்தச் சக்கர நாற்காலிகள் சேவை வழங்கும்.
நடப்பதற்குச் சிரமப்படுவோரிடமிருந்து நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2,300 கோரிக்கைகள் வருகின்றன. அவற்றுள் ஐந்தில் நான்கு கோரிக்கைகள் வெவ்வேறு முனையங்களுக்கு மாறிச் செல்லும் பயணிகளிடமிருந்து வருவதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் சொன்னது.
நடமாடுவதற்குச் சிரமமுள்ள பயணிகள் விமானச் சீட்டுகளுக்கு முன்பதிவு செய்யும்போதே அதுகுறித்து தெரிவிக்கவேண்டும். அதையடுத்து அவர்களுக்குத் தானியக்க சக்கர நாற்காலிகள், சாதாரண சக்கர நாற்காலிகள், ஐந்து பேர் அமரக்கூடிய ‘பகி’ வாகனம் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.
தானியக்க சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவதற்கான பயணிகளை, அவர்கள் வழங்கும் விவரங்களைக் கொண்டு சேட்ஸ் நிறுவனத்தின் சேவை ஊழியர்கள் முன்கூட்டியே அடையாளம் கண்டுவிடுவர். பாதுகாப்பு இருக்கை வாரை அணிந்த பிறகுதான் தானியக்க சக்கர நாற்காலியை இயக்க முடியும். சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம், மூன்றாம் முனையங்களில் உள்ள புறப்பாட்டு நுழைவாயிலுக்கான பாதையில் செல்லும் வகையில் தானியக்க சக்கர வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.



