பொங்கோலில் புதன்கிழமை (ஏப்ரல் 1) ஓட்டுநரில்லா இடைவழிப் பேருந்துச் சேவை தொடங்கியது.
அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் மட்டுமின்றி கூடுதல் தொலைவில் வசிப்போரிடையேயும் இச்சேவை வரவேற்பு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குவாங்சு நகரில் இயங்கும் ஓட்டுநரில்லா வாகன நிறுவனமான வீரைட் நிறுவனத்துடன் சேர்ந்து கிராப், இச்சேவையை வழங்குகிறது. விண்ணப்பங்கள் திறந்துவிடப்பட்டதிலிருந்து வரும் வாரங்களில் இந்தச் சேவையைப் பயன்படுத்த 1,000க்கும் அதிகமானோர் பதிவுசெய்திருப்பதாக கிராப் தெரிவித்தது.
முதல் ஓட்டுநரில்லா இடைவழிப் பேருந்துச் சேவை புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பொங்கோல் கோஸ்ட் மால் கடைத்தொகுதியிலிருந்து புறப்பட்டது. அதற்கு முன்பு போக்குவரத்து மூத்த துணை அமைச்சரும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சுன் ஷுவெலிங் அங்குச் சென்றிருந்தார்.
ஐந்து பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தப் பேருந்தின் முன்னிருக்கையில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அமர்ந்திருப்பார். பொங்கோல் கோஸ்ட் மால் கடைத்தொகுதியிலிருந்து புறப்பட்ட முதல் இரண்டு ஓட்டுநரில்லா இடைவழிப் பேருந்துச் சேவைகளில் பயணம் பாதுகாப்பாக இருந்ததாகப் பயணிகள், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது வாகனம் சரியாகச் செயல்பட்டதையும் வாகனத்தின் வேகம் சீராக அதிகரித்ததையும் கண்டு பெருமைப்பட்டதாக செங்காங் குடியிருப்பாளரான 60 வயது நியோ கூன் எங் குறிப்பிட்டார்.
நொவீனாவில் வசிக்கும் 25 வயது டேரன் டான், ஓட்டுநர் இயக்கும் வாகனத்தைவிட இவ்வாகனம் சீராகப் பயணம் செய்கிறது எனக் கருதுகிறார். அதேவேளை, இந்த ஓட்டுநரில்லா வாகனம் சற்று கூடுதல் வேகத்தில் பயணம் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கருத்துரைத்தார்.
ஓட்டுநரில்லா வாகனத்தின் உணர்க்கருவிகள் சரியாகச் செயல்படுவது அதில் உள்ள திரையில் தெரிவதாகக் கூறினார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வடிவமைப்புப் பாடம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கும் 17 வயது டோ கோங் இயூ. இந்த அம்சம், பயணம் பாதுகாப்பாக இருப்பதைத் தனக்கு உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைக்கு இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று பாதைகளில் இச்சேவை வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு நடுப்பகுதிக்குள் ஒவ்வொரு பயணிக்கும் நான்கு வெள்ளி கட்டணம் விதிக்கப்படும்.

