ஓட்டுநரில்லா தானியங்கி வாகனங்கள்: ஜூன் வரை பொதுமக்கள் கருத்து சேகரிப்பு

ஓட்டுநரில்லா தானியங்கி வாகனங்கள்: ஜூன் வரை பொதுமக்கள் கருத்து சேகரிப்பு

2 mins read
ஜூன் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்துகளைப் பதிவிடலாம்
4cf03119-64c5-420f-9418-6a0df66dcb9b
கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, பொங்கோலின் நார்த்ஷோர் பிளாசாவில் ஊடகங்களுக்கு நடந்த விளக்கக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுநரில்லா வாகனம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஓட்டுநரில்லா வாகனங்களின் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கும் புதிய சட்டத்திட்டங்களை உருவாக்குவதற்கும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பகிரலாம் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை (மே 4) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை கருத்துச் சேகரிப்பு தொடரும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் விளக்கியது.

ஓட்டுநர் இல்லாத வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு உறுதியளிப்பதும் இத்துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தெளிவான சட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதும் பொதுமக்கள் கருத்துச் சேகரிப்பின் முக்கிய நோக்கமாகும்.

மனித செயல்பாட்டை மட்டும் முன்னிறுத்தி தற்போதைய சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, தானியங்கி வாகனங்கள் விபத்துகளில் சிக்கினால் அவற்றுக்கான இழப்பீடு, காப்புறுதி, பொறுப்பேற்றல், சட்ட அமலாக்கம் போன்றவற்றை வரையறுக்க வேண்டய அடிப்படை அவசியம் எழுந்துள்ளது.

நால்வகை அம்சங்கள்

நான்கு முக்கிய அம்சங்களில் பொதுமக்கள் கருத்துச் சேகரிப்பு கவனம் செலுத்தும்.

முதலில், தானியங்கி வாகனங்களை செயல்படுத்துவோருக்கான சட்டங்கள் ஆராயப்படும்.

அவர்களில் தொழில்நுட்ப நிறுவனங்கள், அவ்வகை வாகனங்களை இயக்குவோர், அந்த வாகனகங்களுக்குள் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், வாகனங்களில் இல்லாமல் வேறு இடங்களில் இருந்து வாகனங்களைச் செயல்படுத்துவோர் ஆகியோர் அடங்குவர்.

இரண்டாவதாக, ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் உரிமங்கள் வழங்குவதும் குற்றங்கள் புரிவோர்மீது தண்டனை விதிப்பதும் உள்ளடங்கும்.

மூன்றாவதாக, இழப்பீடும் காப்புறுதியும் பரிசீலிக்கப்படும். அவற்றில் காலத்தோடு இழப்பீடு வழங்குதல் என்ற அம்சத்தோடு பெரிய அளவில் தரவுகளைச் சேகரிப்பதால், ஓட்டுநரில்லா வாகனங்கள்மீது இணையத் தாக்குதல், தீங்குநிரல் போன்ற புதிய வகை அபாயங்களைக் கண்டறிதலும் ஆராயப்படும்.

எனவே, தரவு நிர்வாகமும் அதன் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானதாக அமைச்சு கருதுவதால் மக்களின் கருத்துகளை அமைச்சு எதிர்பார்க்கிறது.

இறுதியாக, மனிதரிடமிருந்து வாகனத்தின் கட்டுப்பாடு தானியங்கி முறைக்கு மாறும்போது விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்பது பற்றிய கருத்துகளும் கோரப்படுகின்றன.

சோதனைத் திட்டமும் கருத்துக்கான இணைய முகவரியும்

தற்போதைய நிலவரப்படி பொங்கோல் வட்டாரத்தில் கம்ஃபர்ட் டெல்குரோ, கிராப் நிறுவனங்கள் ஓட்டுநரில்லா வாகனங்களைச் சோதித்து வருகின்றன.

கருத்துகள் வழங்க விரும்புவோர் go.gov.sg/avpublicconsult என்ற இணையத்தளத்தில் அவற்றைப் பதிவு செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்