பொது இடங்களில் சிறுநீர், மலம் கழித்ததற்காக ஆண்டுக்கு சராசரியாக 600 பேருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக 2023ல் ஆக அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பொது இடங்களில் சிறுநீர், மலம் கழித்ததற்காக அந்த ஆண்டில் மொத்தம் 1,300 அபராதங்கள் விதிக்கப்பட்டன.
அடிக்கடி அசுத்தமாக இருக்கும் பொது இடங்கள் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துகள் அதிகரித்ததே இதற்குக் காரணம்.
அந்த ஆண்டில் கூடுதல் அதிகாரிகள் பொது இடங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டதாக வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
பொது இடங்களில் சிறுநீர், மலம் கழித்ததற்காக 2020, 2021ஆம் ஆண்டுகளில் தலா 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2022ல் இந்த எண்ணிக்கை 700ஆக உயர்ந்தது. 2023ல் இந்த எண்ணிக்கை 1,300ஆக அதிகரித்தது. பிறகு, 2024ல் அது 700ஆகக் குறைந்தது.
காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டோர் இந்தப் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை என்று வாரியம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“அடிக்கடி அசுத்தமாக இருக்கும் பொது இடங்களில் எங்கள் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். தேவை ஏற்பட்டால் நடவடிக்கை எடுப்பர். பொதுமக்கள் தந்த தகவல்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்ட இடங்களும் இதில் அடங்கும்,” என்று வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் எம்ஆர்டி நிலையங்களில் சிறுநீர் கழித்த குற்றத்துக்காகக் குறைந்தது மூன்று ஆடவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சீன நாட்டவரான 41 வயது லீ குவோருய்க்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டு வெவ்வேறு எம்ஆர்டி நிலையங்களில் சிறுநீர் கழித்ததற்காக ஜனவரி 15ஆம் தேதியன்று இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஜனவரி 13ஆம் தேதி இரவு 7.30 மணி அளவில் 57 வயது சோ ஹொங்வெய், பொத்தோங் பாசிர் எம்ஆர்டி நிலையத்தின் பயணிகள் சேவை நிலையத்தின் முன் சிறுநீர் கழித்தார்.
அது குற்றம் என்றும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தே அவர் அவ்வாறு செய்ததாகக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சோ, பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 8ஆம் தேதி பிற்பகல் 12.30 மணி அளவில் தானா மேரா எம்ஆர்டி நிலையத்தின் தளமேடையில் 53 வயது சூ ஃபூக் கான் சிறுநீர் கழித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் தொடர்பான வழக்கு ஜனவரி 28ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்படும்.
பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிக்கும்போது பிடிபடுபவர்களுக்கு $300 அபராதம் விதிக்கப்படும் என்று வாரியம் தெரிவித்தது.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.