சிங்கப்பூருக்குள் வந்திறங்கும் விமானங்கள் உட்பட அனைத்து விமானங்களிலும் ஏற்படக்கூடிய எரிபொருள் சார்ந்த அவசரகாலத் தேவைகள் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் (சிஏஏஎஸ்) மிகவும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது.
அதன் விவரங்களை புதன்கிழமை (மே 20) நடந்த விமானப் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கொக் ஜுவான் விளக்கினார்.
மத்திய கிழக்கில் தொடரும் பூசல், விமானங்களுக்கான பாதுகாப்பு விழிப்புநிலையைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. மேலும், விமானத் துறையில் ஏற்படக்கூடிய புதிய அபாயத்தை எதிர்கொள்ளவேண்டிய அவசியத்தை அது உணர்த்தியுள்ளதாக அவர் கூறினார்.
போர் நடக்கும் வட்டாரங்களில் விமானங்கள் பறந்து செல்வதோடு, சில சூழ்நிலைகளில் அவை அப்பகுதிகளைத் தவிர்க்க நேரிடும்போது பயணப் பாதைகள் நீட்டிக்கப்படுகின்றன.
அப்போது, கூடுதல் பயண நேரத்திற்கும் எதிர்பாராத சூழல்களுக்கும் விமானங்களுக்குப் போதிய அளவு எரிபொருள் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டியுள்ளது.
எனவே, எரிபொருள் விலை ஏற்றத்தால் நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்தாலும் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்துகொள்ள முடியாது என திரு ஹான் எச்சரித்தார்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களையும் வந்திறங்கும் விமானங்களையும் எரிபொருளால் ஏற்படக்கூடிய அபாய எச்சரிக்கை குறித்து கண்காணிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
விமான நிறுவனங்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
விபத்து விகிதம்
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் விமானப் பயணங்களில் விபத்து விகிதம் ஏற்றம் கண்டுள்ளதும் கவலை அளிக்கிறது. விமான விபத்துகளின் விகிதம் 2023ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பயணங்களில் 0.78 விழுக்காடு என இருந்தது. அதே விகிதம் 2024ஆம் ஆண்டில் 1.62 விழுக்காடு என உயர்ந்துள்ளது கவனத்துக்குரியது.
மேலும் மரண எண்ணிக்கை 2023ல் 72ஆக இருந்து 2024ஆம் ஆண்டில் 186 என ஏற்றமடைந்தது.

