4,300 வேலைகளை நிரப்ப விமானப் போக்குவரத்துத் துறை திட்டம்

4,300 வேலைகளை நிரப்ப விமானப் போக்குவரத்துத் துறை திட்டம்

2 mins read
2012c5d2-809f-4044-9538-72df988e08df
சாங்கி விமான நிலையத்தில் பயணப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

விமானப் போக்குவரத்துத் துறையில் வரும் ஆண்டில் 4,300 வேலைகள் நிரப்பப்படும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்து உள்ளார்.

கொவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பின்னர் சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை, கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முன்பிருந்த ஊழியரணியில் 95 விழுக்காடு. இதற்கு முன்னர், கடந்த மே மாதம் 2019ஆம் ஆண்டில் இருந்த ஊழியரணி நிலவரத்தில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டை இந்தத் துறை நெருங்கியது.

கொவிட்-19 நோய் பரவிய வேளையில் விமானப் போக்குவரத்து அடியோடு படுத்ததன் காரணமாக மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களை விமானப் போக்குவரத்துத் துறை இழந்தது.

தற்போது அந்தத் துறை தனது ஊழியரணியை சீர்ப்படுத்தி வருவதாக ‘ஒன்ஏவியேஷன் கரியர்ஸ்’ வேலைக் காட்சியில் கலந்துகொண்டபோது திரு சீ தெரிவித்தார்.

இந்நிகழ்வு, சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அண்டை நாடுகள் மற்றும் வட்டாரத்தின் விமான நிலையங்களில் இருந்து கடும் போட்டி தீவிரமடைந்திருக்கும் வேளையில் உலக விமானப் போக்குவரத்து மையமாக சாங்கி விமான நிலையத்தை உருவாக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

“விமானப் போக்குவரத்து மையம் என்னும் தற்போதைய நமது மதிப்புமிக்க நிலையை எப்போதும் இழந்துவிடக்கூடாது,” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு போன்ற நவீனம் வளர்ந்து வருகிறது.

“தொழில்நுட்பத்துடன் இணைந்த திறனும் உருமாற்றமும் முன்னணி விமானப் போக்குவரத்து மையம் என்னும் நமது நிலைமையை தீர்மானிக்கும்,” என்றும் திரு சீ குறிப்பிட்டார்.

கொவிட்-19க்கு முன்னர் சாங்கி விமான மையமும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளும் சிங்கப்பூர் பொருளியலுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 200,000 வேலைகளை அளித்தன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு ஐந்து விழுக்காட்டுக்கும் மேல்.

சாங்கி விமான நிலைய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொவிட்-19க்கு முந்திய நிலையில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு என்ற நிலையில் முன்னேறி இருக்கும் விமானப் போக்குவரத்து ஊழியரணி 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் முழுமையாக மீண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அந்த நிலையை எட்ட விமானப் போக்குவரத்துத் துறை எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை திரு சீ பட்டியலிட்டார்.